Tue. Jan 13th, 2026

வேலூர் மாவட்டம்:

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா இன்று விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட விஐடி வேந்தர் முனைவர் கோ. விசுவநாதன், “தமிழர்கள் சிறந்த பண்பாளர்கள் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் நமது வாழ்க்கை அமைய வேண்டும்” என உரையாற்றினார்.

மாணாக்கர் நல இயக்கம், பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொங்கல் விழாவிற்கு, விஐடி வேந்தர் முனைவர் கோ. விசுவநாதன் தலைமை வகித்தார். முளைப்பாரி வைத்து, தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட பாரம்பரிய இசைக் கருவிகள் முழங்க, பொங்கல் கிராமத்திற்கு விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தமிழர் மரபை பிரதிபலிக்கும் வகையில், வண்ண கோலங்களால் அலங்கரிக்கப்பட்ட புதுப்பானையில் புத்தரிசி இட்டு, பொங்கல் பானையை வேந்தர் கோ. விசுவநாதன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சேவையாட்டம், தேவராட்டம், பறையாட்டம், பெரிய மேளம், ஜிக்காட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மாணவ, மாணவிகளை வெகுவாக கவர்ந்தன.

வேளாண்மை கல்லூரி சார்பில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களை மாதிரிகளாக வடிவமைத்து அமைக்கப்பட்ட பொங்கல் கிராமத்தை, வேந்தர் கோ. விசுவநாதன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதில் நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திரைப்படப் பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

விழாவில் கிர், காங்கேயம், ஆலம்பாடி, பர்கூர் உள்ளிட்ட பல்வேறு இன மாடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதேபோல் வேளாண் உபகரணங்கள், அம்மி, உலக்கை உள்ளிட்ட பாரம்பரிய பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

விழாவில் உரையாற்றிய வேந்தர் முனைவர் கோ. விசுவநாதன், “தமிழர்களுக்கென தனியான திருவிழா என்றால் அது பொங்கல் தான். உலகம் முழுவதும் சுமார் 160 நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து நிலங்களை காட்சிப்படுத்தியது பாராட்டுக்குரியது” என்றார்.

மேலும், “தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்று சொல்லப்பட்டது போல, தமிழர்களுக்கு தனித்துவமான பண்பு உண்டு. அந்த பண்பை தனித்தனியாக வைத்துக் கொள்ளாமல், அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் மாற்ற வேண்டும். வேறுபாடுகள் இருந்தாலும், சேர வேண்டிய நேரத்தில் ஒன்றாக சேர வேண்டும்” என வலியுறுத்தினார்.

“தமிழர்கள் நன்றாக வாழ வேண்டும். உலகிற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பேரறிஞர் அண்ணா கூறிய ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்பது அனைவருக்கும் பொருந்தும். அந்தக் கட்டுப்பாடே வெற்றியின் அடிப்படை. சிறந்த வாழ்க்கைக்கு சிறந்த கல்வி அவசியம்” என்றும் அவர் தெரிவித்தார்.

திருக்குறள் குறித்து பேசிய அவர், “2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் உலகிற்கு வழிகாட்டும் திருக்குறளை தந்துள்ளார். இன்று அது 170 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எல்லா காலத்திலும், எல்லா நாட்டினராலும், எல்லா மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நூல் திருக்குறள்” என்றார்.

காந்தி – டால்ஸ்டாய் தொடர்பான வரலாற்றுச் சம்பவத்தையும் எடுத்துரைத்த அவர், “அகிம்சை போராட்டம் நமக்கு புதிதல்ல. ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்ற திருக்குறள் இதற்கு முன்பே வழிகாட்டியுள்ளது” என்று கூறினார்.

உலகமயமாக்கல் குறித்துப் பேசிய அவர், “3000 ஆண்டுகளுக்கு முன்பே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று தமிழர் உலக சகோதரத்துவத்தை கூறிவிட்டார். உயர்கல்வியில் நாம் பின்தங்கி விடக்கூடாது. மற்ற நாடுகளோடு போட்டியிட்டு கல்வியில் முன்னேற வேண்டும்” என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில், வேளாண்மைத் துறை சார்பில் இரண்டு கையேடுகள் வெளியிடப்பட்டன. விழாவில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ். விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, மாணாக்கர் நல இயக்குநர் நைஜு, பேராசிரியர்கள் மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர்
T. தென்பாண்டியன்




By TN NEWS