Sat. Jan 10th, 2026

தென்காசி மாவட்டம்:

தென்காசி அருகே உள்ள சாம்பவர் வடகரை ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்து, விவசாயமும் கால்நடை வளர்ப்பும் இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், சாம்பவர் வடகரை கால்நடை மருந்தகத்தின் தற்போதைய நிலை குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தினசரி 100-க்கும் அதிகமான கால்நடைகள் செயற்கை கருத்தூட்டல் மற்றும் பல்வேறு சிகிச்சைகளுக்காக இம்மருந்தகத்தை நாடி வருகின்றன.

ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன் பணியாற்றி வந்த கால்நடை உதவி மருத்துவர் மாறுதலில் சென்றுவிட்டதையடுத்து, இதுவரை நிரந்தர மருத்துவர் நியமிக்கப்படாததால், கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மழைக்காலம் நிலவும் தற்போதைய சூழலில், கால்நடைகளுக்கு பரவும் நோய்த் தொற்றுகளைத் தடுக்கும் வகையில் முறையான மற்றும் தொடர் மருத்துவ சேவை அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகள்:

கால்நடை மருந்தகத்திற்கு உடனடியாக நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும்.

மழைக்கால நோய்த்தடுப்பிற்கான முழுமையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த மருந்தகத்தை முழுநேரமும் செயல்படும் வகையில் தரம் உயர்த்த வேண்டும்.

இப்பகுதியில் பெருகி வரும் தெருநாய்கள் பிரச்சினைக்கு தீர்வு காண, கருத்தடை மையத்தை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

கால்நடை வளர்ப்பே வாழ்வாதாரமாக உள்ள இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்




By TN NEWS