சென்னை | ஜனவரி 2, 2026
சென்னை பெரம்பூர் – செம்பியம் பகுதியைச் சேர்ந்த தில்லைநாயகம் மெயின் தெருவில், இன்று காலை 5 மணி அளவில் போதை ஆசாமிகள் சிலர் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களிடம் வலுக்கட்டாயமாக இழுத்து, தாக்கி ரகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் பலர் போதை ஆசாமிகளால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்துள்ளனர். புத்தாண்டு நிகழ்வுகளை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்திருந்த நிலையில், நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் – செம்பியத்தை சுற்றியுள்ள பல தெருக்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். ஏற்கனவே பலமுறை இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல மக்கள் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காவல்துறை விரைந்து முறையான விசாரணை நடத்தி, சம்பவத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிகளை அடையாளம் கண்டு கைது செய்து, கடும் தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் போதை ஆசாமிகளை தேடி விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
எம். யாசர் அலி
தமிழ்நாடு டுடே செய்தியாளர்
சென்னை மாவட்டம்

