டெல்லி :
ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், தருமபுரி மற்றும் சிதம்பரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
தருமபுரி – மக்கள் வீடு இழப்பு விவகாரம்:
தருமபுரி மாவட்டம், ஏ.ரெட்டிஹள்ளி கிராமத்தில்,
ஏற்கனவே சேலம்–ரயில்வே பாதை அமைப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டம் ஆகியவற்றுக்காக இரண்டு முறை நிலம் கையகப்படுத்தப்பட்டதில், 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் ரயில்வே அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில், மீண்டும் அதே கிராமம் வழியாக புதிய ரயில்வே இணைப்பு பாதை அமைப்பது, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை முற்றிலும் சீர்குலைக்கும் நிலை உருவாகும் என சுட்டிக்காட்டினார்.
எனவே,
👉 புதிய ரயில்வே பாதையை ஏ.ரெட்டிஹள்ளி கிராமத்தைத் தவிர்த்து, மாற்று வழித்தடத்தில் அமைக்க வேண்டும்
👉 மக்கள் குடியிருப்புகளை பாதுகாக்கும் வகையில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
என்ற கோரிக்கையை அவர் உறுதியாக முன்வைத்தார்.
சிதம்பரம், பயண வசதி குறித்த பொதுநலக் கோரிக்கைகள்:
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மக்களின் தினசரி பயண சிரமங்களை கருத்தில் கொண்டு, கீழ்காணும் முக்கிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன:
கோயம்புத்தூரிலிருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ஜன் சதாப்தி விரைவு ரயிலை, சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும்.
இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நேரடியாக பயன் பெறுவார்கள்.
ரயில் எண் 20605/20606 மற்றும் விரைவு ரயில் எண் 16103/16104 ஆகிய ரயில்கள்,
பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
இது சுற்றுவட்டார கிராம மக்களின் பயண வசதியை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.
மக்கள் நலமே முதன்மை:
ரயில்வே திட்டங்கள் வளர்ச்சிக்கானவை என்றாலும்,
அவை மக்களை இடம்பெயரச் செய்யும், வீடுகளை இழக்கச் செய்யும் வகையில் அமையக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என தொல். திருமாவளவன் வலியுறுத்தினார்.
கோரிக்கைகளை கவனமாக கேட்டுக் கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், உரிய அதிகாரிகளுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மண்டல செய்தியாளர் :
D. ராஜீவ் காந்தி

