சென்னை, பெரம்பூர் | டிசம்பர் 16, 2025 :
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17ஆம் தேதி பென்ஷனர் தினமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே பென்ஷனர்ஸ் சமாஜ் சார்பில் பெரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பென்ஷனர் தின விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நிர்வாகிகள், எட்டாவது ஊதியக் கமிஷனில் வழங்கப்பட்டுள்ள தரவுகள் பென்ஷனர்களுக்கும் பொருந்துமா என்பதை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் பாகுபாட்டை நீக்க வேண்டும் என்றும், பென்ஷனர்களின் வயதை கருத்தில் கொண்டு ஓய்வூதியத்தை படிப்படியாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2026 ஜனவரி முதல் 10 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் ஓய்வூதியதாரர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும், மாதந்தோறும் தேவையான மருந்து மாத்திரைகள் தடை இல்லாமல் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே பென்ஷனர்ஸ் சமாஜ் கோட்டத் தலைவர் பிரான்சிஸ், மண்டல செயலாளர் உதயசங்கர், கிளை தலைவர் விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு டுடே
சென்னை செய்தியாளர் : எம். யாசர் அலி
ஒளிப்பதிவாளர் : ராஜேஷ்



