Wed. Dec 17th, 2025


காவல்துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி மன்னன் – கம்பைநல்லூர் ஓலைப்பட்டி வெங்கடேஷ்!
நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன்?

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் கள்ள லாட்டரி விற்பனை பெருமளவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கம்பைநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ள லாட்டரி விற்பனை தடையின்றி தொடர்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

காவல்துறை கள்ள லாட்டரி வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தாலும், அவர்கள் மீண்டும் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கம்பைநல்லூர், திப்பம்பட்டி கூட்ரோடு, அரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ள லாட்டரி விற்பனை வெளிப்படையாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கள்ள லாட்டரி விற்பனைக்கு ஓலைப்பட்டி வெங்கடேஷ் என்பவர் தலைமையாக இருந்து செயல்பட்டு வருவதாகவும், திப்பம்பட்டி கூட்ரோடு பகுதியில் சங்கர் என்பவர் ‘ரன்னிங் லாட்டரி’ முறையில் வாடகை வீடு எடுத்து கள்ள லாட்டரி வியாபாரத்தை திட்டமிட்டு நடத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், கள்ள லாட்டரி உரிமையாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய தொழிலாளர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் கள்ள லாட்டரி முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், அரூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) சதீஷ்குமார் பொறுப்பேற்ற பிறகு, சந்து கடைகள், கள்ள லாட்டரி மற்றும் சமூக விரோத செயல்கள் பெருமளவில் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அவரது நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

அதேபோல், கம்பைநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் கள்ள லாட்டரி உரிமையாளர் வெங்கடேஷை உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர்.

மண்டல செய்தியாளர்
D. ராஜீவ் காந்தி

By TN NEWS