
உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கடும் எச்சரிக்கை.
குடியாத்தம், பிப்ரவரி 5 :
கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, குடியாத்தம் அருகே சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த மாலா (50) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த விநாயகபுரம் பகுதியில் ரூ.12.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். விழாவில் சுப்புலட்சுமி, வேலூர் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.
அப்போது, அருகிலுள்ள சில நபர்கள் கஞ்சா போதையில் அடிக்கடி பிரச்சனை செய்து வருவதாகவும், இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும் அலட்சியமாக பதில் அளிக்கப்படுவதாகவும் கூறி, மாலா கண்ணீருடன் ஆட்சியர் காலில் விழுந்து மனு அளித்தார்.
இதையடுத்து, அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளை அழைத்த ஆட்சியர் சுப்புலட்சுமி, “இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட அனைவர்மீதும் வழக்கு பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பாதிக்கப்பட்டவருடன் நேரடியாக குடியாத்தம் டிஎஸ்பி அலுவலகத்துக்கு வந்து அமர்ந்து விடுவேன்” என கடும் எச்சரிக்கை விடுத்தார்.
ஆட்சியரின் இந்த திடீர் உத்தரவால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

