குடியாத்தம், பிப். 04:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், டி.பி. பாளையம் கிராமத்தில் இன்று (04.02.2026) பிற்பகல் சுமார் 3.50 மணியளவில் நடந்த சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்; இருவர் காயமடைந்தனர்.
பரதராமி–கொத்தூர் சாலையில் விபத்து.
பரதராமி கிராமத்திலிருந்து கொத்தூர் கிராமத்தை நோக்கி, மூன்று பயணிகளுடன் சென்ற ஆட்டோ (வாகன எண் TN 23 BU 2239) டி.பி. பாளையம் கிராமத்தில் உள்ள சர்ச் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதனால் வாகனத்தை உடனடியாக நிறுத்த முயன்ற போது நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஓட்டுநர் உயிரிழப்பு.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரான டி.பி. பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஈசாக் (38), தந்தை இஸ்ரவேல், என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக கார் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
குடும்ப விவரம்.
உயிரிழந்த ஈசாக் அவர்களின் மனைவி பிரியங்கா (33). இவர்களுக்கு
லோகப்ரியன் (12), லோகப்பிரகாஷ் (12), தேவதர்ஷன் (8) என மூன்று மகன்கள் உள்ளனர். இந்த விபத்து அந்த குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்தவர் – மற்றவர்கள் பாதுகாப்பு.
விபத்தில் உடன் பயணம் செய்த டி.பி. பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அன்னச்செல்வி (க/பெ நாகன்) என்பவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மற்ற இரண்டு பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
விசாரணை தொடக்கம்.
உயிரிழந்த ஈசாக் அவர்களின் உடல், உடற்கூறு ஆய்விற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக பரதராமி காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி :
குடியாத்தம் தாலுக்கா
கே.வி. ராஜேந்திரன்
(தாலுக்கா செய்தியாளர்)

