Wed. Feb 4th, 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்தைச் சேர்ந்த செல்வி மகாலட்சுமி என்ற இளம் பெண், தனது மன உறுதி, தன்னம்பிக்கை மற்றும் தொடர் பயிற்சியின் மூலம் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மாற்றுத்திறன் வாழ்க்கையில் ஒரு தடையல்ல; அதை வெற்றியின் படிக்கட்டாக மாற்ற முடியும் என்பதற்கான உயிருள்ள உதாரணமாக அவர் திகழ்கிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான BC2 போசியா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்ற செல்வி மகாலட்சுமியின் இந்த வெற்றி, அவருடைய குடும்பத்திற்கே அல்லாமல், குடியாத்தம் நகரத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. சிறிய வீதி, சாதாரண குடும்ப சூழல், உடல் சவால்கள் – இவை எதுவும் அவரது கனவுகளை தடுக்கவில்லை.

இன்றைய சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் இன்னும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், செல்வி மகாலட்சுமியின் சாதனை நம்பிக்கையின் ஒளியாக திகழ்கிறது. “முடியாது” என்ற சொல்லை தனது அகராதியிலிருந்து நீக்கி, “முயற்சி” என்ற ஒரே வார்த்தையால் வெற்றியை அடைந்துள்ளார்.

இந்த வெற்றி, மாற்றுத்திறனாளி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு
“நாமும் சாதிக்கலாம்” என்ற உறுதியை விதைக்கிறது.
அவரைப் போன்ற வீராங்கனைகளுக்கு உரிய ஆதரவு, பயிற்சி, ஊக்கம் வழங்கப்பட்டால், சர்வதேச அரங்கிலும் இந்தியா பெருமை பெறும் என்பது உறுதி.

செல்வி மகாலட்சுமிக்கு இந்த தங்கப் பதக்கத்திற்காக மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்காலத்தில் மேலும் பல தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அனைவரின் வாழ்த்தாகும்.

மாற்றுத்திறன் குறை அல்ல…! அது மறைந்திருக்கும் வலிமை.
அந்த வலிமையை உலகிற்கு காட்டியுள்ள செல்வி மகாலட்சுமி,
ஒரு வீராங்கனை மட்டுமல்ல… ஒரு சமூகத் தூண்டுகோல்.


✍️ குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS