Wed. Feb 4th, 2026

சின்னமனூர், பிப். 2:
சின்னமனூர் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி யில், பள்ளி மாணவ–மாணவிகளுக்கான இயற்கை விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

விவசாயக் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு:

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா விவசாயக் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு விவசாய நுட்பங்கள் குறித்து செயல்முறை விளக்கங்களுடன் பயிற்சி அளித்தனர்.

தலைமையாசிரியரின் உரை:

இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. எஸ். பாண்டித்துரை அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், வருங்கால சந்ததியினருக்கு விவசாயத்தின் முக்கியத்துவம், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் மற்றும் விவசாயம் வாழ்க்கையோடு இணைந்த அறிவியல் என்பதைக் குறிப்பிட்டார்.

நீர் மேலாண்மை குறித்து விளக்கம்:

நீர் மேலாண்மை அமர்வில், குறைந்த நீரில் அதிக விளைச்சல் பெறும் வழிமுறைகள், சொட்டு நீர் பாசனத்தின் பயன்கள் மற்றும் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இயற்கை விவசாய விழிப்புணர்வு:

ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து, மண்புழு உரம், இயற்கை பூச்சிக்கொல்லிகள் மூலம் நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்வது குறித்து மாணவிகளுக்கு விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சாகுபடி நுட்பங்கள் பயிற்சி:

இப்பகுதியில் முக்கியமாக பயிரிடப்படும் வாழை மற்றும் தென்னை சாகுபடியில் பின்பற்ற வேண்டிய நவீன முறைகள், நோய் மேலாண்மை மற்றும் மகசூலை அதிகரிக்கும் நடைமுறைகள் குறித்து மாணவிகள் எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியின் நோக்கம்:

மாணவப் பருவத்திலேயே விவசாயத்தின் மீது ஆர்வத்தை உருவாக்கவும், நவீன தொழில்நுட்பங்களை அவர்களூடாக விவசாயக் குடும்பங்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு:

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஏராளமான மாணவ–மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டு விளக்கங்களை பெற்றுக்கொண்டனர்.

செய்தி தொகுப்பு:
அன்புபிரகாஷ் முருகேசன்
தேனி மாவட்ட தலைமை செய்தியாளர்

By TN NEWS