Sun. Mar 22nd, 2026

திண்டுக்கல் – ஜனவரி 29

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில்கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், போடி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (42) என்பவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இருவர், ரூ.50 லட்சம் தொழில்கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, முன்பணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து சீனிவாசனை திண்டுக்கல் நேருஜி நகர் பகுதிக்கு வரவழைத்து ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு, பின்னர் கடன் வழங்காமல் ஏமாற்றியுள்ளனர்.

இதுகுறித்து சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

நகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில், நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த அழகேசன் (46) மற்றும் மதுரை கூடல் நகர் பகுதியைச் சேர்ந்த முருகபாண்டி (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும், குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்திர பிரகாஷ்
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்

By TN NEWS