Sun. Mar 22nd, 2026

சென்னை | ஜனவரி 29

சென்னையில் சாக்கு மூட்டையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டுள்ள தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிஹாரைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 26-ம் தேதி அடையார் இந்திரா நகர் முதல் அவென்யூ சாலையில் கிடந்த சாக்கு மூட்டையில், இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக இருப்பது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், பைக்கில் வந்த இருவர் சாக்கு மூட்டையை வீசிச் சென்றது தெரியவந்தது.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24) என உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட அதே மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் (33), நரேந்திர குமார் (45), ரவிந்திரநாத் தாகூர் (45), விகாஷ் (24) உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில், கவுரவ் குமாருடன் அவரது மனைவி முனிதா குமாரி (22) மற்றும் 2 வயது மகன் பிர்மானி குமார் ஆகியோரையும் கொலை செய்து, சாக்கு மூட்டைகளில் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசியதை குற்றவாளிகள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து தேடுதல் வேட்டையில் சிறுவனின் உடல் மீட்கப்பட்ட நிலையில், முனிதா குமாரியின் உடலை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கொலை பின்னணி:

கவுரவ் குமார், முன்பு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த நிலையில், வேலை இழந்துள்ளார். பின்னர் சொந்த மாநிலம் சென்ற அவர், சென்னை அடையாரில் வேலை வாங்கித் தருமாறு நண்பரை அணுகியுள்ளார். அதன் தொடர்ச்சியாக மனைவி, குழந்தையுடன் கடந்த 21-ம் தேதி சென்னை வந்துள்ளார்.

தரமணி பாலிடெக்னிக் அருகே உள்ள தனியார் கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்ட கவுரவ் குமார் குடும்பத்துடன் இருந்தபோது, சம்பவத்தன்று சிக்கந்தரும் அவரது நண்பர்களும் மது அருந்திய நிலையில், முனிதா குமாரியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதைத் தடுக்க முயன்ற கவுரவ் குமாரை இரும்புக் கம்பியால் தாக்கி கொன்றுள்ளனர். அவரது மனைவியையும் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர் அழுதுகொண்டிருந்த 2 வயது குழந்தையை சுவற்றில் மோதி கொலை செய்துள்ளனர்.

மூவரின் உடல்களையும் தனித்தனி சாக்கு மூட்டைகளில் கட்டி, சிறுவனின் உடலை மத்திய கைலாஷ் ரயில்வே பாலத்தின் கீழ் பக்கிங்ஹாம் கால்வாயிலும், முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பைக் கிடங்கிலும், கவுரவ் குமாரின் உடலை பெசன்ட் நகர் கடற்பகுதியில் வீச முயன்றபோது எடை காரணமாக அடையார் இந்திரா நகரில் விட்டுச் சென்றதாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஜேசிபி இயந்திரம் மூலம் குப்பைகளை அகற்றி முனிதா குமாரியின் உடலை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிஹார் மாநிலத்தவர்கள், அதே மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெ. லோகநாதன்
காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர்

By TN NEWS