Sat. Jan 10th, 2026

கள்ளக்குறிச்சி :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வித் துறையின் முன்னணிப் பள்ளியாகத் திகழும் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்டத்தின் சிறந்த அரசுப் பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசின் உயரிய காமராஜர் விருதை பெற்றுள்ளது.

1974ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி, 1994ஆம் ஆண்டு முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக 2,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் தொடர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

ஒழுக்கம், கட்டுப்பாடு, தரமான கற்பித்தல் ஆகியவற்றால் பெற்றோர்களின் நம்பிக்கையை பெற்ற இப்பள்ளியில், மாணவிகள் சேர்க்கை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் இப்பள்ளியில் ஒப்படைத்து வருகின்றனர்.

தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என இருவகை பயிற்றுமுறைகளில் கல்வி வழங்கப்படுகிறது. அனுபவமிக்க ஆசிரியர்கள் ஸ்மார்ட் கிளாஸ் தொழில்நுட்பத்தின் மூலம் பாடங்களை கற்பிப்பதால், மாணவிகள் எளிதாக புரிந்து கொண்டு, 10ஆம் வகுப்பு மற்றும் +2 பொதுத்தேர்வுகளில் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

🎖️மாணவிகளுக்கு ஒழுக்கம் மற்றும் நேர்த்தியை முன்மாதிரியாக கற்றுத் தரும் வகையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் சரஸ்வதி, தினமும் காலை 8.30 மணிக்கே பள்ளிக்கு வருகை புரிந்து மாணவிகளை நல்வழிப்படுத்தி வருவதோடு, சிறப்பு வகுப்புகள் மற்றும் கல்வி செயல்பாடுகளை நேரடியாக கண்காணித்து வருகிறார்.

பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளைப் பெறுவதற்காக, உயர் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி, அவற்றை பெற்றுத் தருவதில் பெற்றோர் ஆசிரியர் கழகம் முக்கிய பங்காற்றி வருகிறது.

கல்வியுடன் உடல் திறனும் அவசியம் என்ற நோக்கில், உடற்கல்வி வகுப்புகளில் சிலம்பம், கராத்தே, சதுரங்கம், யோகா, டென்னிஸ், பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் இப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளனர்.

கலைத்திருவிழா போட்டிகளில், கதை கூறல் போட்டியில் 10ஆம் வகுப்பு மாணவி புவனேஸ்வரி மாநில அளவில் முதலிடம் பெற்று, அரசு முறை சுற்றுப்பயணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

பள்ளியின் கல்வி வளர்ச்சி, ஒழுக்கம், விளையாட்டு, படைப்புத்திறன் ஆகிய அனைத்திலும் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் காமராஜர் விருது உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

✍️ கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே

By TN NEWS