Sat. Jan 10th, 2026

கன்னியாகுமரி, டிசம்பர் 27.

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மயிலாடி பேரூராட்சி, அழகப்பபுரம் பேரூராட்சி, மருங்கூர் பேரூராட்சி, சுசீந்திரம் பேரூராட்சி, குலசேகரம் ஊராட்சி, தேரூர் ஊராட்சி மற்றும் இரவிபுதூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில், காலம் காலமாக கோயில் பணிகளுக்கான கல் சிற்பத் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் மயிலாடி சிற்பத் தொழில் புவிசார் குறியீடு (GI Tag) பெற்றதாகும். இச்சிற்பத் தொழிலை நம்பி 1,200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

கருங்கல் கிடைப்பில் சிக்கல்:

சிற்பத் தொழிலுக்குத் தேவையான கருங்கற்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைக்காததால்,
தேனி, திருநெல்வேலி, சிவகாசி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அனுமதியுடன் விற்பனை செய்யப்படும் கற்களை வாங்கி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து சிற்பத் தொழில் செய்து வருகின்றனர்.

காவல்துறை கெடுபிடியால் தொழில் பாதிப்பு:

கடந்த ஒரு வாரமாக, இவ்வாறு கருங்கற்களை கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் கொண்டு வருவதில் காவல்துறையின் கடும் கெடுபிடி அதிகரித்துள்ளதாக சிற்பத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை:

இதனைத் தொடர்ந்து, சிற்பத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாரம்பரிய சிற்பக் கலைத் தொழிலையும் பாதுகாக்கும் வகையில்,
ஏனைய மாவட்டங்களில் இருந்து அரசு அனுமதியுடன் கருங்கற்களை எளிதாக கொண்டு வர அனுமதி வழங்கி, காவல்துறை கெடுபிடிகளை தளர்த்த வேண்டும் எனக் கோரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

உடனடி நடவடிக்கை – நன்றி தெரிவிப்பு:

இந்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவியதற்காக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு சிற்பத் தொழிலாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்றோர்:
பா.ஜ.க. தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரிவு மாவட்ட செயலாளர்கள் முருகேசன், குமார், மாரிமுத்து, ஷீலாராஜன், மகாலிங்கம், ரெதீஷ், கண்ணன், ரமேஷ்சுந்தர்,சமூக ஊடக பொறுப்பாளர் வெனீஷ் மற்றும் கல் சிற்பத் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வி. மணிகண்டன் வேலாயுதன்
மாவட்ட செய்தியாளர்
கன்னியாகுமரி மாவட்டம்

By TN NEWS