Wed. Feb 4th, 2026


மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி காட்டம் கடும் கண்டனம்:

திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்கும் நோக்கில், அவரது அலுவலகத்தில் ரூ.2.50 லட்சம் பணத்தை முன்கூட்டியே மறைத்து வைத்து, பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் கைது செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பான வழக்கு சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் அம்பலமானது.

இதுகுறித்து துணை இயக்குனர் சரவணபாபு அளித்த புகாரின் பேரில், அலுவலகத்தில் பணத்தை வைத்ததாக கூறப்படும் விஜய், அவருக்கு உதவிய முத்துசுடலை, மேலும் திட்டமிட்டு செயல்பட்டதாக கூறப்படும் தீயணைப்பு படை வீரர்கள் ஆனந்த், முருகேஷ், மூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் திருப்பூர் தீயணைப்பு அலுவலர் வீரராஜ், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

பாதிக்கப்பட்ட துணை இயக்குனர் சரவணபாபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமகிருஷ்ணன்,
“உயர் அதிகாரியை சிக்க வைக்கும் குற்றநாடகத்தின் முக்கிய சூத்திரதாரி தீயணைப்பு அலுவலர் வீரராஜ். அவர்தான் மற்ற தீயணைப்பு வீரர்களை இணைத்து ஒரு நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளார். அவரை போலீஸ் காவலில் விசாரித்தால்தான் முழு பின்னணியும், இதில் தொடர்புடைய மற்ற நபர்களும் வெளிச்சத்திற்கு வரும்” என்று வாதிட்டார்.

தீயணைப்பு அலுவலர் வீரராஜ் தரப்பில் வழக்கறிஞர் பழனிவேல் ராஜன் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மனோஜ் குமார் ஆஜராகினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்ரீமதி காட்டம்,
“அரசு அதிகாரிகளை பதவி உயர்வு பெற விடாமல் தடுக்கும் நோக்கில், சக அதிகாரிகளே குற்றங்களை புனைவது மிகவும் கேவலமானது. இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், “இந்த திட்டத்தின் முக்கிய நபராக இவர் கருதப்படுவதால், அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம். இதன் முழு பின்னணியும் தெரிய வேண்டும்” எனக் கூறி, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

அதே நேரத்தில், ஜனவரி 2 ஆம் தேதி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அமல்ராஜ்
தென்காசி மாவட்ட செய்தி தொடர்பாளர்

 

By TN NEWS