Wed. Nov 19th, 2025




ஈரோடு, நவம்பர் 12 (தமிழ்நாடு டுடே):
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தின் 60, வேலம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி நிதியில் செயல்பட்டு வரும் கோமாதா மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் தொடர்பான பெரும் பணமோசடிகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

அந்தக் குழுவிற்கு எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளை மூலமாக, தமிழக அரசின் ஊராட்சி நிதி திட்டத்தின் கீழ் உறுப்பினர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.5,000 டெபாசிட் பெயரில் கட்டாயமாக பிடித்தம் செய்து, மொத்தம் ரூ.50,000-ம் கோமாதா குழுத் தலைவி தங்கமணி பெயரில் வங்கியில் வைப்பாகச் செய்து பின்னர் அந்தத் தொகையை மறைமுகமாக எடுத்துக்கொண்டு, குழு பொறுப்பாளர் மலர் கொடி மற்றும் வங்கி மேலாளர் இணைந்து கமிஷன் அடிப்படையில் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், குழுவில் கடன் வரவு–செலவு கணக்குகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. மாதாந்திர சிறுசேமிப்பு தொகை வங்கியில் செலுத்தப்படவில்லை என்றும், கடன் திருப்பிச் செலுத்திய பணிகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, சமூக ஆர்வலர் தர்மராஜ் அவர்கள் 03.10.2025 அன்று 7 பக்க ஆதார ஆவணங்களுடன் மொடக்குறிச்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எழுமாத்தூர் இந்தியன் வங்கி மேலாளர் ஆகியோருக்கும், மேலும் RBI Ombudsman (CMS/N202526023464176/2025-26) மூலமாகவும் புகார் அளித்திருந்தார். எனினும் இதுவரை எந்தத் துறையிலிருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், புகாரைத் தொடர்ந்து, குழுத் தலைவர் தங்கமணி மற்றும் மலர் கொடி ஆகியோர் தங்களின் குடும்ப உறுப்பினர்கள்  மூலமாக மனுதாரரையும், குழு உறுப்பினர்களின் உறவினர்களையும் நேரிலும், தொலைபேசியிலும் மிரட்டியதாகவும், சிலரிடமிருந்து ரகசிய இடங்களில் கையெப்பம் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு நிதியில் வழங்கப்படும் கடனுதவி திட்டங்களை சட்டப்படி வசூலிக்காமல், மிரட்டல் மற்றும் சட்டவிரோத அழுத்தம் வழியே பணம் வசூல் செய்யும் நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும், இதற்கெதிராக எந்த நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேற்படி குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய மலர் கொடியின் சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்குமா? தமிழக அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தர்மராஜ்
மாவட்ட செய்தியாளர்,
ஈரோடு.

By TN NEWS