Mon. Aug 25th, 2025



நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பருத்திபள்ளி கிராம அரசு மதுபானக் கடை முன்பு எப்போதுமே வாகனங்களை நிறுத்தி மது வாங்குவோரால் பெரும் நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமம் அனுபவித்து வந்தனர்.

இந்த பிரச்சினையை செய்தியாக எடுத்து வெளியிட நமது தேடல் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் நாமக்கல் மாவட்ட முதன்மை செய்தியாளர் வெங்கடேஷ் அவர்கள் முயன்றபோது அங்கே இருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அவர் 100-ல் அழைத்து புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவலர் ஒருவர் விளக்கமளித்து சென்றுவிட்டார்.

பின்னர் முன்பகை காரணமாக சிலர் வெங்கடேஷ் அவர்களை தாக்கி, அவருடைய செல்போனை நொறுக்கியுள்ளனர். கடுமையாக காயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் சுந்தரராஜன், லோகநாதன், விஜயகுமார் ஆகியோர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், ஊடக அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. “சமூகக் குறைகளை வெளிக்கொண்டு வந்து மக்களுக்காகப் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பின்றி இருக்கும் நிலை கவலைக்குரியது. இதுபோன்ற செயல்களுக்கு போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

– திருப்பூர் செய்தியாளர் சரவணகுமார்

By TN NEWS