டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என்று டெல்லியில் நேற்று மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தேசிய பிரச்சார குழு சார்பில் (NCPRI) கலந்தாலோசிப்பு கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசாங்கம் கொண்டு வந்த இந்த சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து அறப்போர் இயக்கம் பிரச்சாரமும் கூட்டமும் நடத்தி வந்துள்ளதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தமிழ்நாட்டின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதை எதிர்க்க கோரி மனுவும் அனுப்பியிருந்தோம். நம்மைப் போல வேறு சில இடங்களிலும் இதற்காக வேலை செய்த சமூக அமைப்புகள் ஆர்வலர்கள் வந்திருந்தனர். அறப்போர் இயக்கமும் இதில் கலந்து கொண்டது.
ஏற்கனவே தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கும் தனிநபர் தகவல்களுக்கும் ஒரு நல்ல சமன்பாடு சட்டத்தில் இருந்தது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 8(1)(j) வில் பொது வேலைக்கு அல்லது பொது நலனுக்கு சம்பந்தமில்லாத தனிநபர் தகவல்களுக்கும் ஒருவருடைய அந்தரங்க வாழ்க்கையில் ஊடுருவும் தனி நபர் தகவல்களுக்கு விலக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மற்றபடி பொதுநலனுக்கு அல்லது பொது வேலைக்கு சம்பந்தப்பட்ட தனிநபர் தகவல்களை கொடுப்பது சட்டமாக இருந்தது. ஆனால் தனி நபர் தகவல்கள் என்றாலே தரத் தேவையில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தை டிஜிட்டல் தனி நபர் தரவு பாதுகாப்பு சட்டம் மூலமாக மத்திய அரசாங்கம் திருத்தியுள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு சாவு மணி அடிக்கும் செயல் என்பதே இந்தியா முழுவதும் உள்ள ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதனுடைய விதிகள் அமலுக்கு வந்தால் மக்களின் தகவல் அறியும் உரிமை முழுவதுமாக பறிக்கப்படும். எனவே இந்த சட்ட திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று பல சமூக அமைப்புகள் , பத்திரிகையாளர்கள், வக்கீல்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் லோக்கூர், A.P ஷா போன்றவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் பெரிய நிறுவனங்களிடம் இருந்தும் அரசிடம் இருந்தும் தனி நபரின் தகவல்களை எப்படி பாதுகாப்பது என்பதற்கு பதிலாக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் உரிமை பறிப்பதாகவும் மேலும் மக்கள், சமூக அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் போன்றவர்கள் கையாளும் பொதுநலம் சம்பந்தப்பட்ட தனிநபர் தகவலாக இருந்தாலும் அதை கோடிக்கணக்கான அபராதம் விதிக்கும் குற்றமாக மாற்றியுள்ளது இந்த சட்டம்.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் டிஜிட்டல் தனி நபர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதன் மூலமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் செய்த திருத்தங்களை எதிர்த்து அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். தற்பொழுது அரசு இந்தியாவின் அட்டார்னி ஜெனரலுக்கு இதைப் பற்றி கருத்து கேட்டு அனுப்பியுள்ளது என்று தெரிய வருகிறது.
மத்திய மோடி அரசின் இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து நாம் தொடர்ந்து போராட வேண்டிய அவசியம் உள்ளது. மக்களாகிய நாம் தான் இந்த சட்டத்தை பாதுகாக்க குரல் எழுப்ப வேண்டும். வரும் மாதங்களில் இந்த சட்ட திருத்தம் செயல்பாட்டுக்கு வராமல் தடுக்க சட்ட திருத்தங்களை கைவிட தொடர்ந்து இதற்கான அழுத்தத்தை கொடுப்போம்!
நன்றி – அறப்போர் இயக்கம் – தன்னார்வ தொண்டு அமைப்பு.
தொகுப்பு: சேக் முகைதீன் – இணை ஆசிரியர்.