பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவழித்து,145 கோடி மக்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து, அவர்களிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஒரு ஆதார் அட்டை தயாரிக்கப்படுகிறது.
அதே போல தான் பல ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டு வாக்காளர் அடையாள அட்டைகளும் குடும்ப அட்டைகளும் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்திய மக்கள் இதுவரை தங்கள் கைகளில் வைத்திருந்த ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், குடும்ப அட்டைகள் எதுவும் நம்பகமான ஆவணங்கள் இல்லை; அவைகளை எங்களால் நம்ப முடியாது; அதன் அடிப்படையில் அவர்களை வாக்காளர்கள் ஆக்க முடியாது” என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்படி ஆவணங்கள் நம்பகமானவை இல்லை என்றால் அந்த ஆவணங்களை வழங்கியவர்கள் யார்?
சுதந்திரம் பெற்ற காலம் முதல் இந்த போலி ஆவணங்களை வைத்து தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையத்தை எப்படி தண்டிக்கலாம்?
கோடிக்கணக்கான மக்களின் அடையாளமாக இதுவரை இருந்த, இருந்து கொண்டிருக்கும் இந்த ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி நம்பகத் தன்மையற்றவை என்றால், இவற்றை வழங்கிய அரசாங்கங்களை என்னவென்று அழைப்பது?
அந்த அரசாங்கங்களை எப்படி தண்டிப்பது?
“கடந்த நொடி வரை விற்கப்பட்டு, நீங்கள் உண்டு மகிழ்ந்த அத்தனையும் உணவுப் பொருட்கள் அல்ல; மலம்” என்று ஒருவர் சொல்கிறார் என்றால் தூக்கிலேற்றப்பட வேண்டியவர் அந்த கடைக்காரர் அல்லவா?
இந்திய பிரஜை என்பதற்கு இத்தனை ஆண்டுகள் கையில் வைத்திருந்த அத்தனை ஆவணங்களும் போலியானவை என்று 145 கோடி மக்களை பார்த்து மோடி அரசு சொல்கிறது என்றால், அதற்கு என்ன அர்த்தம்?
145 கோடி மக்களும் திருடர்கள் என்று தானே அர்த்தம்?145 கோடி மக்களும் கயவர்கள் என்று தானே அர்த்தம்?
உலகிலேயே சொந்த நாட்டு மக்களை கயவர்கள், சந்தேகத்திற்கு உரியவர்கள் என்று சொல்லும் ஒரு அரசாங்கம் இருக்கிறது என்றால், அது மோடி அரசாங்கமாக தான் இருக்கும்.
“நீங்கள் எங்களுக்கு வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் தான் இதுவரை தேர்தலை நடத்தினோம். இப்போது நீங்கள் கொடுத்த ஆவணங்களை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவை அத்தனையும் போலியானவை” என்று கூறும் தேர்தல் ஆணையம் அந்த ஆவணங்களை வழங்கியவர்களின் முகத்தில் காரி உமிழ வேண்டும்.
போலி அடையாள அட்டைகளை வழங்கிய ஆட்சியாளர்கள் முகத்தில் இந்திய பிரஜைகளும் காரி உமிழ வேண்டும்.
தேர்தல் ஆணையம் என்பது ஜனநாயகத்தின் அச்சாணிக்கு ஒப்பானது.
ஆனால், சமீபகாலமாகத் தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறைகள், கோடிக் கணக்கான மக்களின் வாக்குரிமைக்கு வேட்டு வைப்பதோடு ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
சுதந்திரம் வாங்கிய இந்த முக்கால் நூற்றாண்டுகளில் பிறப்பு இறப்பை பதிவு செய்வதற்கான வசதிகளற்ற ஆயிரக்கணக்கான கிராமங்கள் இன்னும் இந்தியாவில் இருக்கின்றன.
இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தாங்கள் இந்தியர் தான் என்பதை நிரூபிக்கத் தங்களின் பிறந்த தேதி, பிறந்த இடம் தொடர்பான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்கிறது ஆணையம்.
இந்த உத்தரவு நாட்டின் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகவே அமைந்துள்ளது.
ஒருவன் இந்தியனா இல்லையா என்பதை அரசாங்கம் தான் ஆவணங்களை உருவாக்கிப் பாதுகாக்க வேண்டும். ஆவணங்களை உருவாக்குவதற்கு கட்டமைப்புகளை உருவாக்கி இருக்க வேண்டும். இல்லாத சூழலில் பிறப்பு இறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்றால் சாமானிய மக்கள் எங்கு போய் அந்த சான்றிதழ்களை வாங்கி கொடுப்பார்கள்?
பீகாரில் நான்கு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் விவரங்களை மூன்று வாரங்களில் சரி பார்த்து எப்படி திருத்தம் செய்வது?
தேர்தல் ஆணையத்தின் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கின்ற இந்த போக்கு காரணமாக வாக்காளர்கள் பலர் தங்கள் உரிமைகளை இழக்க நேரிடும்.
இந்திய ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் மக்கள் இந்திய பிரஜைகளாக இருக்க வேண்டும் தான்.
ஆனால், சரி பார்க்கிறேன் என்று காரணம் காட்டி, தான் ஒரு கண்டிப்பான அதிகாரி என கட்டமைக்க உண்மையான வாக்காளர்களின் உரிமைகளை பறித்து விடக்கூடாது.
பிகாரில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க ஜனநாயக விரோத போக்கை ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ளுகிறது. தாங்கள் வாக்காளர்கள் தான் என்பதை இந்திய குடிமக்களே நிரூபிக்க வேண்டும் என்கின்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு, நடைமுறைக்கு சாத்தியற்றது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்திருக்கிறார். ஆக,இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேக கறை படிந்து விட்டது. அந்த கறையை போக்க தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம் தான் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இறுதியாக தேர்தல் ஆணையத்திற்கு ஒன்றைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
ஜனநாயகத்தின் உயிர் மூச்சுக்கு ஒப்பானது தேர்தல் ஆணையம்;
ஆனால், அதுவே ஜனநாயகத்தை படுகொலை செய்து விடக் கூடாது.
இந்தியா மக்களாட்சி எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியம். இந்திய சுதந்திரம் முதல் இன்றுவரை மக்களின் அதிகாரம் மிக்க நாடாக உலகில் கோலோச்சி வளர்ச்சி மிகுந்த நாடு எனும் பெருமைக்குரிய நாடு நம் இந்திய நாடு.
இந்திய தேர்தல் ஆணையம் தற்போது கேள்விக்குறியாக செயல்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும். மக்களின் அதிகாரம் பறிக்கப்படும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. அனைத்து தரப்பினரின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
ஒரு மாநிலத்தின் மட்டும் 65 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை பீகார் மாநிலத்தில். இன்னும் முழுமை பெறாத நிலையில் இருக்கிறது.
இந்தியா முழுவதும் தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிந்தித்து பார்க்க மக்களே?
சேக் முகைதீன் – இணை ஆசிரியர்.