Tue. Jul 22nd, 2025

செய்தி வெளியீடு எண்: 74/2025
பத்திரிகை செய்தி
நாள்: 10.04.2025


மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் ஆயுதமேந்திய தீவிரவாத நடவடிக்கைகள் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் முச்சந்திப்பு வனப்பகுதிகளில் 2013-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மூன்று மாநிலங்களின் காவல்துறை உயர் அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில், இடதுசாரி தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.இதனடிப்படையில், 2014 முதல் 2024வரையிலான காலகட்டத்தில்,சிறப்பு இலக்குப் படை, தமிழ்நாடு (Special Task Force, Tamil Nadu), சிறப்பு செயலாக்கக்குழு, கேரளா(Special Operations Group, Kerala), மற்றும் நக்சல் எதிர்ப்புப் படை, கர்நாடக(Anti-Naxal Force, Karnataka) ஆகியவை இணைந்து கேரளா மாநிலம் வயநாடு, பாலக்காடு, மலப்புரம், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மற்றும் தமிழ்நாடு மாநில நீலகிரி மாவட்டங்களில், மொத்தம் 9 முறை கூட்டு வனத்தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சிறப்பு இலக்குப் படையினரால் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய மாவோயிஸ்ட் ஒருவரும், “க்யூ” பிரிவின் நடவடிக்கையில் பெண் மாவோயிஸ்ட் ஒருவரும் தமிழக-கேரள எல்லையில் கைது செய்யப்பட்டனர். மேலும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களின் சிறப்புப் படைகள் எடுத்த தொடர் நடவடிக்கைகளால், மாவோயிஸ்ட்களின் வெளிப்படையான நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது, திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல்துறை இயக்குநர் / படைத் தலைவர், தமிழ்நாடு அவர்களின் உத்தரவின் பேரில், 07.04.2025 முதல் 09.04.2025 வரை, திரு. ந. மா. மயில்வாகனன், காவல்துறைத் தலைவர்/ சிறப்பு இலக்குப்படை, தமிழ்நாடு அவர்களால் வயநாடு (கேரளா), சாம்ராஜ்நகர் (கர்நாடகா) மற்றும் நீலகிரி (தமிழ்நாடு) ஆகிய மாவட்டங்களில் இரண்டு வெவ்வேறு வனப்பகுதிகளில் ‘Operation Safe Forest’ என்ற பெயரில் கூட்டு வனத்தேடுதல் வேட்டைகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

இத்தேடுதல் வேட்டைகளின்போது, மழைப்பொழிவும், ஆபத்தான விலங்குகள் மற்றும் உயிரினங்கள் காணப்பட்ட சூழ்நிலையிலும் இத்தேடுதல் வேட்டைகளானது சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது, இத்தேடுதல் நடவடிக்கைகளின் வழியாக மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் தொடர்பாக கண்காணிப்பு செய்யப்பட்டது. இத்தேடுதல் வேட்டைகளின்போது, தேவையான உளவுத்துறை தகவல்கள் திரட்டப்பட்டன. இத்தேடுதல் வேட்டைகளின்போது, சந்தேகத்திற்கிடமான இடதுசாரி தீவிரவாதிகளின் நடமாட்டமும் கண்டறியப்படவில்லை. நிறைவாக தெப்பக்காட்டில் கூட்டுக் குழுக்களுடன் கலந்து பேசி, செயலாக்க மேம்பாட்டிற்காக விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கிடையேயான எல்லைப் பகுதிகள் தொடர்ந்து தமிழ்நாடு சிறப்பு இலக்குப் படையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
•••••••••••••••••••••••

ஆர்.சுதாகர் – துணை ஆசிரியர்

By TN NEWS