பத்திரிக்கை செய்தி எண்:73
பத்திரிக்கை செய்தி
தேதி- ஏப்ரல் 10/2025
இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம், சென்னை.
வளரும் டிஜிட்டல் யுகத்தில் சைபர் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான சைபர் குற்றங்கள் முன் பின் தெரியாத நபரிடமிருந்து வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்கள் மூலம் வரும் செய்திகளுக்கு நாம் பதிலளிப்பதால் தொடங்குகின்றன. இந்த மோசடிகள் ஆன்லைன் வேலைகளை வழங்குவது, வீட்டிலிருந்து வேலை தருவது, முதலீட்டு வழிகாட்டுதல்களை வழங்குவது போன்ற உண்மையானவை மற்றும் நியாயமான வாய்ப்புகள் போல பாசாங்கு செய்கின்றன.
இவ்வாறாக வரும் செய்திகளுக்கு பதில் அளிக்கும் போது மக்கள் மறுமுனையில் ஒரு மனிதருடன் தொடர்புகொள்கிறார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால், அது மனிதனாக அல்லாமல் ஒரு சாட்பாட்டாகவும் இருக்கலாம்.
சமீப காலங்களில், சாட்போட்கள் வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் குறைகளைக் கையாள்வதற்கு மட்டுமல்லாமல், பொதுமக்களை ஏமாற்றுவதற்கு மோசடி செய்பவர்களுக்கும் ஒரு சர்வசாதாரண கருவியாக மாறிவிட்டன.
சைபர் மோசடி செய்பவர்கள் மக்களுடன் நம்பத்தகுந்த வகையில் தொடர்பு கொள்ள சாட்போட்களைப் பயன்படுத்தி, அதன் இறுதியில் முக்கியமான தகவல்களை திருடுகிறார்கள். மனிதர்களைப் போலவே மக்களுடன் உரையாடும் இந்த சாட்பாட்களின் திறன், உண்மையான வாடிக்கையாளர் சேவைக்கும் மோசடிக்கும் இடையிலான வேறுபாட்டைக் கண்டறிவதைக் கடினமாக்குகிறது.
குறைந்தபட்ச மனிதவளத்துடன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகபட்ச சாத்தியமான மக்களை தொடர்பு கொள்ள முடியும் மற்றும் அதே நேரத்தில் அவர்களின் வெற்றி விகிதத்தை அதிகரிக்க முடியும் என்ற காரணத்திற்காக மோசடி செய்பவர்கள் மக்களை தொடர்பு கொள்ள சாட்போட்களைப் பயன்படுத்துகிறார்கள்.
இதில் மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் புகழ்பெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளாக நடிக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் அதிகாரப்பூர்வ லிங்க்ட்இன் சுயவிவரம் போன்ற சரிபார்க்கக்கூடிய நற்சான்றுகளை வழங்கவோ அல்லது அதிகாரப்பூர்வ நிறுவன எண்கள் மூலம் தொடர்பு கொள்ளவோ மாட்டார்கள். அதற்கு பதிலாக, தங்கள் நிறுவனத்தின் கொள்கையின் காரணமாக அதனை பகிர மாட்டோம் என்று கூறி அவர்கள் தங்களின் அடையாளங்களை மறைக்கிறார்கள்.
மோசடி செய்பவர்கள் சாட்போட்களைப் பயன்படுத்தி போலி வாடிக்கையாளர் சேவை அளிப்பது போல, மக்களின் சிக்கல்களைத் தீர்க்கும் போர்வையில் பயனர்களை தங்களின் சுய விவரங்களைப் பகிர வைத்து ஏமாற்றுகிறார்கள்.
டேட்டிங் செயலிகள், பெரும்பாலும் மோசடி செய்பவர்களால் எதிர் தரப்பினரின் உணர்ச்சிகளை கவர்ந்திழுக்க பயன்படுத்தப்படுகின்றன. முன்பெல்லாம், இவ்வாறான டேட்டிங் செயல்களில் மறுமுனையில் உள்ளவர் எதிர் பாலினத்தைப் போல மாறுவேடமிட்ட அதே பாலினத்தைச் சேர்ந்தவராக பெரும்பாலும் இருப்பது தெரியவந்தது. ஆனால் இன்று, சாட்போட்கள் இவ்வேலையை செய்து நம்பிக்கையை வளர்ப்பதற்கும், பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களைக் கோருவதற்கும் பாதிக்கப்பட்டவர்களை உணர்ச்சிபூர்வமாக கையாளுவதற்கும் அதற்கேற்ற சுயவிவரங்களை உருவாக்குகின்றன.
சாட்போட்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கருவிகளாகும். அவை பயனர் தொடர்புகள் மற்றும் தரவுகளிலிருந்து கற்றுக்கொண்டு காலப்போக்கில் அவர்களின் பதில்களை மேம்படுத்த முடியும். நம் கேள்விகளுக்கு அது பதில் அளிக்கும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும். ஒரு சாதாரண மனிதனால் அந்த குறுகிய காலத்தில் இதை செய்ய முடியாது.
இந்த கருவிகள் உண்மையானதாக தோன்றும் சரியான மற்றும் சூழல் சார்ந்த செய்திகளை உருவாக்க முடியும். இதனால் மக்கள் சுலபமாக நம்பி இந்த மோசடிகளுக்கு ஆளாகும் வாய்ப்பை அதிகரிக்கின்றது.
பொதுமக்களுக்கு அறிவுரை:
1. எதுவும் மிகவும் சரியானதாகவோ அல்லது மிகவும் நல்லதாகவோ இருக்கும்போது, அதை சந்தேகிக்கவும்.
2. தனிப்பட்ட அல்லது தொழில்முறை சுயவிவரங்களைப் பகிர்ந்து கொள்ளாததற்கு “நிறுவனத்தின் கொள்கையை” மேற்கோள் காட்டுவதன் மூலம் அவர்கள் பெரும்பாலும் வெளிப்படைத்தன்மை இல்லாததை நியாயப்படுத்துகிறார்கள். இதை நம்ப வேண்டாம்.
3. சில சந்தர்ப்பங்களில், மோசடி செய்பவர்கள் போலி லிங்க்ட்இன் சுயவிவரங்கள் அல்லது பிற சமூக ஊடக கணக்குகளை உருவாக்கலாம், அவை உண்மையான ஊழியர்களைப் போலவே இருக்கும். இருப்பினும், இந்த சுயவிவரங்கள் பெரும்பாலும் உண்மை நிலைத்தன்மையையும் கொண்டிருக்கவில்லை.
4. மோசடி செய்பவர்கள் அதிகாரப்பூர்வ நிறுவன சேனல்களை விட பொதுவான மின்னஞ்சல் முகவரிகள், தனிப்பட்ட தொலைபேசி எண்கள் அல்லது செய்தியிடல் செயலிகள் மூலம் தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள்.
5. அவர்களின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்கள் அல்லது அவர்களின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். அந்த நபர் உண்மையிலேயே நிறுவனத்தில் வேலை செய்பவரா என்பதை உறுதிப்படுத்த இது உதவும்.
6. எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் பகிர்வதற்கு முன்பு வலைத்தளங்கள் மற்றும் URL களை கவனமாக சரிபார்க்கவும்.
7. பதில் மிகவும் விரைவாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கும்போது, அது மனிதனல்ல என்பதை புரிந்து கொள்ளவும்.
8. தெரியாத மூலங்களிலிருந்து வரும் இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.
9. இந்த அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பதற்கு விழிப்புடனும் தகவலறிந்தவராகவும் இருப்பது முக்கியம்.
புகாரளித்தல்:
இதே போன்ற மோசடி நடவடிக்கைகளில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும். சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-யை அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in இல் புகார் பதிவு செய்யவும்.
R.சுதாகர் – துணை ஆசிரியர்