உலகத் தாய்மொழி தின உறுதிமொழி – தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது
தென்காசி, பிப். 23: உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த், இ.கா.ப. தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வு மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது. காவல்துறையினர் தங்களது அன்றாட பணியில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதை உறுதிப்படுத்தும் விதமாக, தமிழ் மொழிக்காக பணியாற்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உறுதிமொழியில், “எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ்! தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க நாங்கள் உழைப்போம். அனைத்து ஆவணங்களிலும் தமிழை பயன்படுத்தி, குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட ஊக்குவிப்போம். இணையத்திலும் தமிழை பேணி வளர்ப்போம்” என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வு தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடையே விளக்கி, அதிகாரத்துறையில் தமிழின் பயன்பாட்டை வலியுறுத்தும் முயற்சியாக அமைந்தது.
அமல்ராஜ் – முதன்மை செய்தியாளர் – தென்காசி மாவட்டம்.