


தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள வீரகேரளம்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் என்ற கிராமத்தில், சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீரகேரளம்புதூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார், மப்டி உடையில் மதுபோதையில், அடுத்தவர் வீட்டுக்குள் நுழைந்து பதுங்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம், கோமதிப்பாண்டியன் என்பவரின் வீட்டில் நடந்ததாக கூறப்படுகிறது. அவர் வீட்டின் பின்புறம் இருந்து வீடு உள்நுழையும் சப்தம் கேட்டு அச்சமடைந்த கோமதிப்பாண்டியன், தனது உறவினர்களை அழைத்துச் சென்று பார்ப்பதற்கு, அங்கு சதீஷ்குமார் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். இந்த தகவல் பரவியதும், கிராம மக்கள் தாமாகவே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் அறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை முடிவுக்கு கொண்டு வந்தனர். இருப்பினும், பொதுமக்கள் சதீஷ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன. சதீஷ்குமார் வழக்கு விசாரணையோ அல்லது புகார் காரணமோ இல்லாமல் ஏன் அப்பகுதியில் சென்றார்? மதிய நேரத்தில் தனியாக அந்த வீட்டிற்குள் ஏன் நுழைந்தார் என்பது பற்றிய விளக்கம் பொதுமக்களால் கேட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்ட முதன்மை செய்தியாளர் அமல் ராஜ்.