Tue. Jul 22nd, 2025

Fʀɪᴅᴀʏ 𝟭𝟳, Jᴀɴ. ,𝟮𝟬𝟮𝟱:

உத்தரபிரதேசம் மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு: 6 பேர் மீது வழக்குபதிவு*

உத்தரபிரதேசம்:

உத்தரபிரதேசத்தில் மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகம் திருடப்பட்ட வழக்கில் டாக்டர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் மீரட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனாலும் அவரது உடல்நிலை சரியாகாததால் கடந்த 2022-ம் ஆண்டு மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

அங்கு பரிசோதனை செய்ததில் அவரது இடது சிறுநீரகம் திருடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனையில் சென்று முறையிட்டபோது அவர்கள் மறுத்ததுடன், போலி ஆவணம் ஒன்றை கொடுத்து அவரது 2 சிறுநீரகங்களும் இருப்பதாக சாதித்தனர். அத்துடன் அவருக்கும், குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து மீரட் கோர்ட்டில் அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கோர்ட்டு, அந்த மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் அந்த மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சுனில் குப்தா மற்றும் அவரது மனைவி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


                       TNT – M. Shaikhmohideen.

By TN NEWS