Wed. Apr 1st, 2026

Indian Railways-இன் தற்போதைய டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து விதிகளில் பயணிகளுக்குச் சாதகமான மாற்றங்கள் தேவை என எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அமைப்பின் செயல் இயக்குநர் ஆ. சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புதிய ரத்து விதிகளின் காரணமாக, கடைசி நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்யும் பயணிகள் அதிகளவு கட்டணத்தை இழக்க நேரிடுகிறது. இது குறிப்பாக சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு நிதிசுமையை ஏற்படுத்துகிறது. இத்தகைய நடைமுறைகள் பயணிகளிடமிருந்து மறைமுகமாக பணம் வசூலிப்பதற்குச் சமமானது என அவர் குற்றம்சாட்டினார்.

உறுதிப்படுத்தப்படாத காத்திருப்பு பட்டியல் (Waiting List) டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டாலும், அதில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படுவது முறையற்றது. சேவை வழங்கப்படாத நிலையில் கட்டணம் வசூலிப்பது நுகர்வோர் உரிமைக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், RAC (Reservation Against Cancellation) டிக்கெட்டில் பயணிகளிடம் முழு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. ஆனால், அவர்களுக்கு முழுமையான படுக்கை வசதி வழங்கப்படாமல், ஒரு இருக்கை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த நிலையில், முழுக் கட்டணத்தை வசூலிப்பது நியாயமற்றது எனவும் கூறப்பட்டுள்ளது.

📌 முக்கிய கோரிக்கைகள்:

உறுதி செய்யப்படாத டிக்கெட்டுகளுக்கு முழுத் தொகை திருப்பி வழங்க வேண்டும்

RAC பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிக்கேற்ற கட்டண அமைப்பு கொண்டு வர வேண்டும்

ரத்து கட்டணங்களை குறைத்து நியாயமான அளவில் நிர்ணயிக்க வேண்டும்

அவசர சூழ்நிலைகளில் டிக்கெட் ரத்து செய்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும்


பொதுமக்களின் நலனுக்காக செயல்படும் Indian Railways, தனது கொள்கைகளை நுகர்வோர் நலன் மற்றும் நீதி உறுதி செய்யும் வகையில் உடனடி மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


ஷேக் முகைதீன்.

By TN NEWS