Thu. Mar 26th, 2026

பத்திரிக்கை வெளியீடு…!


சென்னை:
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐஏஎஸ் அவர்களுக்கு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, 28.03.2026 (சனிக்கிழமை) அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

எதிர்வரும் 26.03.2026 (வியாழக்கிழமை) மற்றும் 27.03.2026 (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்கள் அஷ்டமி மற்றும் நவமி தினங்களாக இருப்பதால், இந்நாட்களில் பெரும்பாலான பொதுமக்கள் சுப நிகழ்வுகளைத் தவிர்க்கும் நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது வழக்கம்.

இதனால், அந்த நாட்களில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணிகள் மிகக் குறைந்த அளவில் நடைபெறுவதுடன், பதிவுத்துறையின் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் கணிசமாக பாதிக்கப்படுகிறது.

மேலும், 2025–2026 நிதியாண்டு வருகிற 31.03.2026 அன்று நிறைவடைய உள்ள நிலையில், அதற்கு முன்பாக அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் வாய்ப்பும் உள்ளது.

எனவே, மேற்கண்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, 28.03.2026 (சனிக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் தங்களது சொத்துகளை பதிவு செய்து பயன் பெறுவதுடன், முன் நாட்களில் இழந்த அரசின் வருவாயையும் ஈடு செய்ய முடியும் எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்பு:
V. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி
கள்ளக்குறிச்சி மாவட்டம்

By TN NEWS