Sat. Mar 14th, 2026

திருக்கோவலூர், மார்ச் 13:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் திருப்பணித்திட்ட பயிற்சி வகுப்பின் நிறைவு விழா இன்று திருக்கோவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழக முதல்வர் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், தமிழ்நாடு முழுவதும் திருக்குறள் திருப்பணித்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இப்பயிற்சி வகுப்பின் நிறைவு விழா திருக்கோவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருப்பணித்திட்ட உறுப்பினரும் பயிற்றுநருமான சிங்கார உதியன் தலைமை வகித்தார். கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் கு. சீனிவாசன் வரவேற்புரை வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை உதவியாளர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.

கல்லூரி முதல்வர் முனைவர் மகாவிஷ்ணு, திருக்குறள் தொடர்பான வினாடி வினா மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான திருக்குறள் திருப்பணிக்குழு உறுப்பினர்களான கவிஞர் இதயம் கிருட்டிணா மற்றும் முனைவர் சாந்தகுமார் ஆகியோர் “திருக்குறள் காட்டும் ஒழுக்கம்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு உரையாற்றினர்.

மேலும் பயிற்றுநர்கள் வளர்மதி செல்வி, சா. சித்ரா, நல்நூலகர் மு. அன்பழகன், எழுத்தாளர்கள் கவிநிலவன் மற்றும் மித்ரா தேவி ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினர்.

இப்பயிற்சியை தமிழ் வளர்ச்சித் துறை தட்டச்சர் பவித்ரா ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வி. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி, கள்ளக்குறிச்சி மாவட்டம்

By TN NEWS