Mon. Mar 2nd, 2026

மார்ச் 2 – குடியாத்தம்

குடியாத்தம் பகுதியில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 24.02.2026 முதல் தொடர் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 42,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடாமல் இருப்பதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பட்டா மாற்றம், வருமானச் சான்று, சமூகச் சான்று, முதியோர் ஓய்வூதியம், பேரிடர் நிவாரண உதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாணவர்கள் மற்றும் விவசாயிகள் அவசரச் சான்றிதழ் தேவைகளுக்காக அலுவலகங்களை அணுகியும், பணிகள் நடைபெறாததால் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்கின்றனர்.

முக்கிய கோரிக்கைகள்:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவுத் துறையில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

பணித்தன்மை மற்றும் பணி பளுவை கருத்தில் கொண்டு, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும்.

கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் (TAPS) அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் 12% பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும்.

2003 ஆம் ஆண்டு முதல் செலுத்திய பங்களிப்பை வட்டியுடன் பொது வருங்கால வைப்பு நிதி (GPF) கணக்கில் கொண்டு சென்று மீள வழங்க வேண்டும்.

TAPS திட்டத்தின் கீழ் கிராம உதவியாளர்கள் முழுமையான பயன்களைப் பெற அரசு உறுதி செய்ய வேண்டும்.


இவ்வாறு 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் அவதியை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் சங்க நிர்வாகிகள் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று தீர்வு காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS