Fri. Feb 27th, 2026

நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் முன் பரபரப்பு…?

குடியாத்தம், பிப்.15 :
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்த கமலேஷ் (23), கட்டிடத் தொழிலாளி, என்பவர் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், குற்றவாளியை போலீஸார் நேற்று இரவு கைது செய்து, குடியாத்தம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இரவு சுமார் 9.30 மணியளவில் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த போது, காவல் நிலையத்திலிருந்து திடீரென தப்பி ஓடி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க போலீஸார் தனிப்படையை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளி தப்பியோடிய சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்திலிருந்து குற்றவாளி தப்பியது எப்படி?  கேள்விக்குறியாகும் பாதுகாப்பு நடைமுறை…?

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி, குடியாத்தம் காவல் நிலையம் வளாகத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம், காவல்துறை பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படவிருந்த குற்றவாளி,

எவ்வாறு கண்காணிப்பை மீறினார்?
காவல் நிலையத்தில் போதுமான காவல் பணியாளர்கள் இருந்தார்களா?
கைதிகள் மீது விதிக்கப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா?
என்பது குறித்து விசாரணை அவசியமாகியுள்ளது.

போக்சோ போன்ற கடுமையான பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தப்பியோடுவது, பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் சம்பவமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்,

சம்பந்தப்பட்ட காவல் பணியாளர்களின் அலட்சியம் குறித்து துறைரீதியான விசாரணை நடத்தப்படுமா?
குற்றவாளி தப்பியோடியதற்கான பொறுப்பு யார்மீது?
என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

✍️ குடியாத்தம் தாலுகா செய்தியாளர் : கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS