திண்டுக்கல் | மக்கள் செய்தி
திண்டுக்கல் நகரில் ரூ.50 லட்சம் கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போடி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (42) என்பவரை, மர்ம நபர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கடன் வாங்கித் தருவதாக கூறி, முன் பணமாக ரூ.5 லட்சம் வழங்குமாறு கேட்டுள்ளனர். இதனை நம்பிய சீனிவாசனை திண்டுக்கல் நேருஜி நகர் பகுதிக்கு வரவழைத்து ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு, கடன் வழங்காமல் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் நகர் மேற்கு காவல் நிலையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அழகேசன் (46), முருகபாண்டி (40) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, கார்த்திக் மேற்பார்வையில், நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் தொடர்ச்சியாக, திண்டுக்கல் NGO காலனி, CTO காலனி பகுதியைச் சேர்ந்த முகமது அன்சார் (37) என்பவர் முக்கிய குற்றவாளி எனத் தெரியவந்து, அவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த மோசடி சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
ராமர்
திண்டுக்கல் மாவட்டம்.
