🔹 தவறான ஸ்கேன் ரிப்போர்ட் – உடல்நலம் பாதிப்பு.
திருத்துறைப்பூண்டி ஹனிபா மருத்துவமனையில் சிந்தாமணிக்கு வழங்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட், மற்றொரு நபரின் அறிக்கையாக இருப்பது பின்னர் தெரியவந்தது. அந்த தவறான ரிப்போர்ட்டின் அடிப்படையில் மருந்துகள் வழங்கப்பட்டதால், அவரது வயிற்றுவலி மேலும் தீவிரமடைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டது.
🔹 மூத்த குடிமகளின் சட்டப் போராட்டம்.
கல்வியறிவற்ற மூத்த குடிமகளான சிந்தாமணி, உரிய பதில் கிடைக்காததால் சட்ட வழிமுறையைத் தேர்ந்தெடுத்தார். மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு பின்னர் வழக்கறிஞர் மூலம் சட்ட நோட்டீஸ் அனுப்பி, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
🔹 மருத்துவ அலட்சியம் நிரூபணம்.
வழக்கை விசாரித்த திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம், ஸ்கேன் ரிப்போர்ட் மாற்றம் போன்ற முக்கிய தவறு, மருத்துவரின் கவனக்குறைவை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டது. இது நோயாளியின் உடல்நலத்திற்கு நேரடி ஆபத்தை ஏற்படுத்தும் செயல் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
🔹 மருத்துவமனை வாதம் நிராகரிப்பு.
“தவறு விரைவில் சரிசெய்யப்பட்டது; வாய்மொழியாக தகவல் தெரிவித்தோம்” என்ற மருத்துவமனை தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. மருத்துவ சேவைகளில் வாய்மொழி அறிவுறுத்தல் போதுமானதல்ல என்றும், எழுத்துப்பூர்வ ஆவணங்கள் அவசியம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
🔹 நஷ்டஈடு வழங்க உத்தரவு.
மருத்துவர் அபு ஹனீஃபா கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட சிந்தாமணிக்கு ரூ.35,000 நஷ்டஈடும், ரூ.10,000 வழக்குச் செலவுத் தொகையும் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
🔹 தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை.
இந்த தீர்ப்பு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் சென்டர்கள் நோயாளி பதிவுகள், பரிசோதனை அறிக்கைகள் குறித்து கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
R. Sudhakar
Sub Editor
Tamilnadu Today Magazine Network



