Sat. Jan 10th, 2026

குடியாத்தம் | ஜனவரி 6

உலக நாடுகளின் உள்நாட்டு அரசியலில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் தலையீட்டு நடவடிக்கைகளையும், வெனிசூலா நாட்டின் ஜனநாயகத் தலைவரான அதிபர் நிக்கோலாஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள அடக்குமுறையையும் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் குடியாத்தத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், தோழர்கள் குபேந்திரன் (நகர செயலாளர்), சி.சரவணன் (பே.தெற்கு தாலுகா செயலாளர்), எஸ்.சிலம்பரசன் (குடியாத்தம் தாலுகா செயலாளர்) ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சிபிஎம் மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.டி.சங்கரி,
“வெனிசூலா நாட்டின் இயற்கை வளங்களை கைப்பற்றும் நோக்கில், அந்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் அரசியல், பொருளாதார, சட்டரீதியான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது உலக ஜனநாயகத்திற்கே விடுக்கப்படும் சவால்” எனக் குறிப்பிட்டார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.காத்தவராயன், கே.சாமிநாதன் ஆகியோர்,
“சோசலிச பாதையைத் தேர்ந்தெடுத்த நாடுகள் மீது பொருளாதார தடைகள், கைது மிரட்டல்கள், அரசியல் அழுத்தங்கள் மூலம் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை திணிக்க முயற்சிக்கிறது. இதற்கு உலகளாவிய எதிர்ப்பு உருவாக வேண்டும்” என வலியுறுத்தினர்.

மேலும் உரையாற்றிய பி.குணசேகரன், கே.செம்மலர் உள்ளிட்டோர்,
வெனிசூலா மக்களின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்றும், சர்வதேச சட்டங்களை மீறி செயல்படும் அமெரிக்காவின் போக்கை உலக சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்
தோழர்கள் நா.சே.தலித் பாஸ்கர் (பகுதி செயலாளர், தாலுகா குழு உறுப்பினர்),
எம்.ராஜா, சி.என்.ராம்குமார் (தாலுகா குழு உறுப்பினர்கள்),
வெ.இந்திரா,
கார்கூர் பகுதி தோழர்கள்,
கோபி (கிளை செயலாளர்),
எம்.முருகையன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கட்சி தோழர்கள் கலந்து கொண்டு,
“அமெரிக்கா  – வெனிசூலாவை விட்டு வெளியேறு”,
“உலக நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும்”
என முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம், உலகளாவிய இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து, அமெரிக்க ஆதிக்க அரசியலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவோம் என சிபிஎம் அறிவித்துள்ளது.


கே.வி.ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS