விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போது பல வருடங்களாக இருந்து வந்த பக்தர்கள் வழிபடும் பாதையை மாற்றி கூட்ட நெரிசல் இன்றி காலதாமதம் இல்லாமல் குறுகிய நேரத்தில் வரிசையில் சென்று அம்மனை தரிசிக்க, இரண்டு வெவ்வேறு வழிகள் அமைத்தும், வளத்தி முதல் மேல்மலையனூர் வரையிலான சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை மாற்றியமைத்து போக்குவரத்து நெரிசலின்றி ஈயக்குணம், தாத்திகுளம் பகுதியில் வாகனங்கள் நிறுத்த (VEHICLE PARKING) மாவட்ட காவல்துறையால் புதியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இந்தாண்டு 12,887 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10,226 வழக்குகளில் புலன் விசாரணை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்து அதன் தகவலை படிவம் 96 ன் படி 5,716 புகார் தாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்ட 3,841 வழக்குகள் உட்பட 31,178 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 2,797 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. (டிச.30) விழுப்புரம் நகர பகுதியை கண்காணிக்க 100 சிசிடிவி கேமராக்கள் அமைத்து மாவட்ட பெரும்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த சிசிடிவி காவல் கட்டுப்பாட்டு அறை புதிதாக திறக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது ).
மாவட்டத்தில் காணாமல் போன 1,039 நபர்கள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டில் மாவட்டத்தில் 489 கொள்ளை, 21 வழிப்பறி 468 திருட்டு போன்ற குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 339 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு களவாடப்பட்ட ரூ.2,00,20,545/- மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 32 கொலை வழக்குகளில், 68 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 கொலை குற்ற வழக்குகளில் 42 குற்றவாளிகள் நீதிமன்ற மூலம் தண்டனை பெறப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டிய 1,825 நபர்கள் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 5,058 நபர்கள் மீதும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்ற வழக்குகளில் 50 நபர்கள் மீதும் மொத்தம் 44,732 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 588 சாலை விபத்து வழக்குகளில் 611 நபர்கள் இறந்துள்ளனர்.
மாவட்டத்தில் கொலை, கொள்ளை, சாராயம் கடத்தல் போன்ற குற்ற செயலில் ஈடுபட்ட 11 சாராய வியாபாரிகள், 12 கஞ்சா குற்றவாளிகள், 1 சைபர் குற்றவாளி உட்பட 55 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 105 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட 250 எதிரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 242 கி.கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.24,20,000/- ஆகும்.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் 244 வழக்குகளில், 344 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 5,430 கி.கிராம் புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.54,30,000/- ஆகும். குட்கா பொருட்கள் விற்பனை செய்த 182 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 32 லாட்டரி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 68 எதிரிகள் கைது செய்து ரூ.70,490/- பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மது கடத்துவோர், மது விற்பனை செய்வோர் என 2,195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,224 நபர்கள் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 1,004 லிட்டர்கள் சாராயம் 122 லிட்டர் கள்ளு, 1,850 லிட்டர் ஊரல், 14,134 லிட்டர் மது பாட்டில்கள், மது வழக்குகளில் தொடர்புடைய 358 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளில் ஆஜராகாமல் இருந்த தலைமறைவு எதிரிகள் 2,440 பேர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 981 பழைய குற்றவாளிகளை நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நன்னடத்தை நிபந்தனை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
269 போக்சோ குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்தாண்டில் போக்சோ நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 23 எதிரிகளுக்கு தண்டனை பெறப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்: தமிழ்.மதியழகன்.

