சென்னை, வியாசர்பாடி
24.12.2025
டீசல் போட வந்த காரை திருடிச் சென்ற இருவர் கைது
குடிபோதையில் பூந்தமல்லி வரை சென்று மீண்டும் சென்னை திரும்பிய போது போலீசார் மடக்கிப் பிடிப்பு சென்னை வியாசர்பாடி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மெல்வின் (36). இவர் அம்பத்தூரில் கடந்த 15 ஆண்டுகளாக கார் சர்வீஸ் ஷோரூம் ஒன்றை நடத்தி வருகிறார்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மனித உரிமைகள் பிரிவில் மாநில செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவர் தனது பார்ச்சூனர் காருக்கு டீசல் நிரப்புவதற்காக இன்று (24.12.2025) அதிகாலை 2 மணியளவில், வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார்.
அப்போது, காரில் இருந்து இறங்கி ஏடிஎம் கார்டு மூலம் பணம் செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில், அங்கு இருந்த அடையாளம் தெரியாத நபர், மெல்வின் வந்த காரை திடீரென எடுத்துக் கொண்டு செல்ல முயன்றுள்ளார். இதனை மெல்வின் தடுக்க முயன்ற போது, அந்த நபர் அவரை இடித்து தள்ளிவிட்டு அதிவேகமாக காருடன் தப்பிச் சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மெல்வின் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில், இரவு பணியில் இருந்த வியாசர்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், திருடப்பட்ட காருக்குள் மெல்வினின் செல்போன் இருந்ததால், அதன் சிக்னல் அடிப்படையில் போலீசார் பின்தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டனர். அதில், அந்த கார் முதலில் கும்மிடிப்பூண்டி பகுதியில் இருப்பது தெரியவந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, அதே கார் மீண்டும் சென்னை நோக்கி திரும்பி வருவதாக கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, போலீசார் காரை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், புழல் பகுதியில் கார் பஞ்சராகி நின்றது. அப்போது, காரில் இருந்த நபர் இரண்டு செல்போன்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.
போலீசார் காரை மீட்டு, உரிமையாளர் மெல்வினிடம் ஒப்படைத்தனர். பின்னர், தப்பியோடிய நபர் கொண்டு சென்ற செல்போனின் சிக்னல் அடிப்படையில், புழல் பகுதியில் வைத்து குற்றவாளியை கைது செய்தனர்.
விசாரணையில், கண்ணதாசன் நகர், 8வது பிளாக், 2வது தெருவைச் சேர்ந்த சூர்யா (25) என்பதும், அவர் மீது ஏற்கனவே 4 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. மேலும், சூர்யா தனது நண்பரான மணலி பகுதியைச் சேர்ந்த பரத் (28) என்பவருடன் குடிபோதையில் காரை திருடிச் சென்றது உறுதியானது.
இதனையடுத்து, சூர்யா மற்றும் பரத் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாடு டுடே
சென்னை செய்தியாளர் – எம். யாசர் அலி



