திண்டுக்கல் | வத்தலகுண்டு
25.12.2025
நட்பாக பழகி வீட்டு சாவியை திருடி வீட்டிற்குள் புகுந்து 15½ பவுன் தங்க நகை திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த முருகவேல் – செல்வி தம்பதியினர், கணக்கம்பட்டி கோயிலுக்கு சென்றிருந்த போது, மதுரை திருநகரைச் சேர்ந்த ஆரோக்கியமேரி என்ற இளம் பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டு, நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த பெண் அடிக்கடி தம்பதியரின் வீட்டிற்கு வந்து சென்றதாகவும், அதன் பின்னர் வீட்டு சாவி, பீரோ சாவி மற்றும் ஆதார் கார்டு ஆகியவை காணாமல் போனதாகவும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, தம்பதியினர் மாற்று சாவி மூலம் வீட்டைத் திறந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே, தம்பதியினர் கேரளாவிற்கு கோயிலுக்கு சென்று, கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி வீடு திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 15½ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில், வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதம், சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா தலைமையிலான போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மதுரை திருநகரைச் சேர்ந்த ஆரோக்கியமேரி என்பவர், நட்பாக பழகி தம்பதியரின் நம்பிக்கையை பெற்றுக் கொண்டு, வீட்டு சாவிகளை திருடி வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை திருடியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, போலீசார் ஆரோக்கியமேரியை கைது செய்து, அவரிடமிருந்து 15½ பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ச. சந்திரமோகன்
குற்றப் பிரிவு தலைமை நிருபர்
திண்டுக்கல் – தமிழ்நாடு டுடே
