
தருமபுரி | டிச.16, 2025
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொம்மிடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான சட்டமன்றத் தொகுதி பயிலரங்கம் மற்றும் மாநாடு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நகர, ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் அவர்கள்,
“திமுக, அதிமுக, தேமுதிக, விசிக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் 20 முதல் 30 ஆண்டுகளாக இருந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கான கட்சி; குடும்ப அரசியலுக்கான கட்சி அல்ல,” என்று தெரிவித்தார்.
மேலும், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பொம்மிடி இரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதற்காக இரயில் நிலைய மேலாளருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதுடன், இரயில் நிலையத்தையும் நேரில் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில், பிற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
மண்டல செய்தியாளர் :
ராஜீவ் காந்தி
