Wed. Dec 17th, 2025


திண்டிவனம்,

திண்டிவனம் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை, வரும் 27-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, பஸ் நிலையத்தில் இறுதிக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திண்டிவனம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே, 6 ஏக்கர் பரப்பளவில், நகராட்சி சார்பில் ரூ.25 கோடி செலவில் இந்த புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது கட்டுமான பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில், பஸ்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் பாதைகளில் மட்டும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன.

இதனைத் தவிர, பஸ் நிலையத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு ஆர்ச்சுகளில் வண்ணம் பூசும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பஸ் நிலைய வளாகத்தில்,

50 பஸ் நிறுத்தங்கள்,

61 கடைகள்,

பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளுடன்
பஸ் நிலையம் முழுமையாக தயார் நிலையில் உள்ளது.


இதே நாளில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். அந்த நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் போது, திண்டிவனம் நகராட்சி புதிய பஸ் நிலையம் மற்றும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள காலி மைதானத்தில், முதலமைச்சர் வருகைக்கான விழா மேடை அமைக்கும் பணிகளும் சீரமைப்பு பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS