Tue. Dec 16th, 2025

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 32,719 பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ஒரே நேரத்தில் உரிமைத்தொகை வெற்றிகரமாக வரவு வைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நேற்று நடைபெற்ற “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” நிகழ்ச்சியில், விரிவாக்கம் செய்யப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு தர்மபுரி பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தின் கீழ், 32,719 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் வங்கி பற்று அட்டைகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ், ஆ. மணி எம்பி முன்னிலையில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் சதீஷ்,
“ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்ட திட்டமாகும்”
என்று தெரிவித்தார்.

மேலும், தர்மபுரி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் முதல் கட்டமாக ரூ.738.63 கோடி மதிப்பில் 2,84,091 குடும்பத் தலைவிகள் பயனடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாம் கட்டமாக, “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் பெறப்பட்ட 63,298 விண்ணப்பங்களில், தகுதியான 32,719 மகளிர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத்தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, கோட்டாட்சியர் காயத்ரி, தனித்துணை ஆட்சியர் (சமாதானம்) சுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம் உள்ளிட்ட அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி

By TN NEWS