

வடசென்னை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையின் தாக்கம் காரணமாக, பெரம்பூர் ஓட்டேரி பகுதியில் உள்ள 50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று இன்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.
தார்கா சாலையில், மண்டலம் 6-இல் அமைந்திருந்த இந்த பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர்ந்து பெய்த மழையால் கட்டிடத்தின் பலவீனமான பகுதி சரிந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ தகவல் கிடைத்த உடனே ஓட்டேரி போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு, சுற்றுப்புறப் பகுதி பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த இடிபாடுகள் காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து தாமதம் மற்றும் சாலையில் நெரிசல் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு திருவைகா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி நேரில் சென்று நிலையைப் பார்வையிட்டார்.
கட்டிடம் எந்த காரணத்தால் இடிந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முழுமையான காரணம் அடுத்த கட்ட விசாரணையில் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டுடே
சென்னை மாவட்ட செய்தியாளர் : எம். யாசர் அலி
