திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் பகுதி, ஒரு சாதாரண வாடகை வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பத்தை, கணநேரத்தில் பதைபதைக்கும் துயரமும் மரணமும் சூழ்ந்துவிட்டன. மூன்று மாத ஒரு குழந்தை மரணமடைவது என்பது பெரிய துயரம்; ஆனால் அந்த மரணம் கொலை என்றும், அதையும் செய்தது குழந்தையின் தாய் என்றும் தெரிய வந்திருப்பது ஆம்பூரை முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது…!
குடும்பம் – சாதாரண வாழ்க்கையின் நடுவே ஏற்பட்ட அசாதாரண துயரம்:
மேல்தள வாடகை வீட்டில் வசித்தவர்கள் அக்பர் பாஷா – அர்ஷியா தம்பதியினர். அக்பர் பாஷா அருகிலுள்ள தனியார் தொழிற்சாலையில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இருவருக்கும் இரண்டு குழந்தைகள். அதில் மூன்று மாதங்களுக்கு முன்னர் பிறந்தது அர்ஃபலா பாத்திமா என்ற பெண் குழந்தை.
எல்லாமே இயல்பாக நடைபெற்று வந்த நிலையில், நிகழ்ந்த சம்பவம் அந்தக் குடும்பத்தை இருண்ட ஆழத்தில் தள்ளியது.
குழந்தை காணாமல் போனது…? துயரம் துவங்கிய தருணம்;
அன்று, அர்ஷியாவின் மாமியார் பல் வலிக்காக மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வீடு திரும்புகிறார். வந்தபோது குழந்தை காணாமல் போய் இருப்பதை கண்டு, மருமகளிடம் கேட்டார்.
இருவரும் வீடு முழுவதும் தேடினர். அப்போது “தரைத்தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியையும் பார்ப்போம்” என்று அர்ஷியா கூறியதாக தகவல். தண்ணீர் தொட்டி திறக்கப்பட்டதும் அதிர்ச்சி—?குழந்தை மிதந்துகொண்டிருந்தது….!!!!
மாமியார் அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து குழந்தையை எடுத்துச் சென்று ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீஸ் சந்தேகம் – ‘மூன்று மாத குழந்தை தானாக தொட்டியில் விழ முடியாது’
சம்பவ இடத்துக்கு வந்த நகர போலீசார்,”மேல்தளத்தில் இருந்த குழந்தை, நடக்கக்கூட முடியாத நிலையில், தரைத்தளத்தில் உள்ள பெரிய தண்ணீர் தொட்டியில் தானாக எப்படிக் கிடைத்தது?” என்ற சந்தேகத்தினை முன்வைத்தனர்.
அதன்பின், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
விசாரணையில் அதிர்ச்சிகரமான வாக்குமூலம்:
போலீசார் அர்ஷியாவை விசாரணைக்கு அழைத்தபோது,
குட்டியை கவனிப்பதில் ஏற்பட்ட சிரமம், தூக்கமின்மை, மனஅழுத்தம் ஆகிய காரணங்களால், தானே குழந்தையை தண்ணீர் தொட்டியில் தள்ளியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, அர்ஷியா கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
தாயின் கைகளில் குழந்தையின் முடிவா? – சமுதாயம் சிந்திக்க வேண்டிய நேரம்…?
மூன்று மாத குழந்தை பலி. அந்தக் கொலை செய்தது தாயே என்ற தகவல், மக்கள் மனதில் சொல்ல முடியாத வருத்தம், அதிர்ச்சி, கோபம் ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது.
🔴 இந்தச் சம்பவம், மனஅழுத்தம் (Postpartum Depression) போன்ற பெண்களுக்கு வரும் மனநல பிரச்சினைகளை கவனிக்காமல் விட்டால் எவ்வளவு பெரிய விபரீதம் ஏற்படலாம் என்பதையும் நினைவூட்டுகிறது.
🔴 குடும்பங்களும் சமுதாயமும், புதிய தாய்மார்களின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு தர வேண்டியது மிக அவசியமானது.
ஆம்பூரில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை மட்டும் அல்லாது, ஒரு குடும்பத்தையும் சிதைத்த துயரத்தின் தடம் பதித்துள்ளது.
செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்

