சிறப்பு கட்டுரை:
தமிழகத்தில் அரசு வேலை வழங்கி தருவதாகக் கூறி பணம் பறிப்பது புதிய ஒன்று அல்ல. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இது ஒழுங்குபடுத்தப்பட்ட மோசடி வலையமாக மாறி, பல இளைஞர்களின் கனவுகளையும், பொருளாதார நிலையும் சீரழித்து வருகிறது. அத்தகைய ஒரு மோசடி சங்கிலியைச் சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் கிராம உதவியாளர் சுமதி (43) மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது, மக்கள் விழிப்புணர்வை மீண்டும் கூர்ந்து நோக்க வைக்கிறது.
கருணை அடிப்படை நியமனம்; நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்த தொடக்கம்:
2012ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் வருவாய் துறையில் கிராம உதவியாளராக சேர்ந்த சுமதி, அரசு பணியாளராக இருந்தவர், கிடைக்கும் நம்பிக்கையை பயன்படுத்தி, வேலை தேடி அலைந்தவர்களை ஏமாற்றியிருக்கிறார். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் “அரசு வேலை வாங்கித் தருவேன்” என்று பல லட்சம் ரூபாய் பெற்றதாக வருவாய் துறைக்கு ஏற்கெனவே புகார்கள் கிடைத்திருந்தது. அதன் பின்னர் துறை அதிகாரிகள் அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்தனர்.
குடியாத்தம் இளைஞர்களின் கனவுகளைச் சிதைத்த 8 லட்சம் மோசடி…?
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், சந்தோஷ் என்ற இளைஞர்கள் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர்கள். 2017இல் சுமதியுடன் பழக்கம் ஏற்பட்ட அவர்களிடம், “வருவாய் துறையில் அரசு வேலை வாங்கித் தருகிறேன்” என்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
அதன்படி இருவரிடமும் தலா ரூ.4 லட்சம், மொத்தம் ரூ.8 லட்சம் பெற்றுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட பின், வருவாய் துறையின் போலியான பணிநியமன ஆணை மற்றும் போலி அடையாள அட்டை ஆகியவற்றையும் செல்போனில் அனுப்பியுள்ளார். மேலும், “செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வாருங்கள்” என்று கூறி அதிகாரப்பூர்வமாக தோற்றுவிக்க முயன்றுள்ளார்.
உண்மை வெளிச்சம், சந்தேகம்தான் காப்பாற்றியது:
சுமதி வழங்கிய நியமன ஆணையில் சந்தேகம் கொண்ட இரு இளைஞர்களும், முதலில் உள்ளூர் அரசு அலுவலர்களிடம் விசாரித்தனர். அப்போது வழங்கப்பட்ட நியமன ஆணை முழுவதும் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது.
செங்கல்பட்டில் கைது…! குடியாத்தம் போலீசின் அதிரடி:
குடியாத்தம் நகர ஆய்வாளர் ருக்மாங்கதன், உதவி ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான போலீஸ் அணி செங்கல்பட்டில் சுமதியை கைது செய்து குடியாத்தம் கொண்டு வந்தனர். விசாரணைக்குப் பின்னர் நேற்று இரவு அவரை வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர்.
அரசு வேலை மோசடி – எச்சரிக்கை மணி:
இந்தக் கைது, அரசு வேலை என்ற ஆசையை பயன்படுத்தி ஏமாற்றும் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு ஒரு எச்சரிக்கை. அரசு நியமனங்கள் எந்த ஒரு முகவரின் மூலமும் நடைபெறாது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
அத்துடன், வேலை தேடுபவர்களுக்கு “எந்த கட்டணமும் தர வேண்டிய அவசியம் இல்லை” என்ற உண்மையை புரிய வைக்கிறது.
மக்களின் விழிப்புணர்வே இத்தகைய மோசடிகளை முற்றிலும் தடுக்கக்கூடிய மிகப் பெரிய ஆயுதம்.
“மக்களுக்கு ஆசையும், அவசரமும் இருக்கும் வரை இதுபோன்ற மோசடிகள் அரங்கேறிக் கொண்டு இருப்பது தவிர்க்க முடியாது”
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்
