22.11.2025 – காஞ்சிபுரம்
தமிழ்நாடு டுடே
செய்தியாளர்: பெ. லோகநாதன்
கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி: காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியான துயரத்துக்கு பின்னர், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், முதல் முறையாக நாளை (23.11.2025) பொதுநிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் “மக்கள் சந்திப்பு” நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.
5 நாட்கள் சிறப்பு பயிற்சி – தவெக தொண்டரணியினர்:
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, கடந்த 5 நாட்களாக ஜேப்பியார் கல்லூரியில் தவெக தொண்டர்கள் தீவிர பயிற்சியைப் பெற்று வருகின்றனர். இப்பயிற்சிகளை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் வழங்கினர்.
பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:
கூட்ட நிர்வாகம்
காவல்துறை ஒருங்கிணைப்பு
அவசர உதவி சாதனங்கள் பயன்படுத்தல்
பொதுமக்கள் நுழைவு/வெளியேற்ற கட்டுப்பாடு
பாதுகாப்பு திட்டம்
சுற்றுப்புற வசதிகள்
கூட்டத்தை கட்டுப்படுத்துதல்
விஜய், பயிற்சி பெறும் தொண்டர்களுடன் நேரடியாக ஆலோசனை நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களையும் சந்தித்து குறைகளை கேட்டு தீர்வு முயற்சி மேற்கொள்வார்.
காவல்துறைக்கு தவெக கொடுத்த கடிதம் – கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு:
இந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வலியுறுத்தி, தவெக திருப்பெரும்புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். கார்த்திக், சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளரிடம் கடிதம் அளித்துள்ளார்.
கடிதத்தில்:
நிகழ்ச்சி உள்ளரங்கில் நடைபெறும் என்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதியுடன் அனுமதிக்கப்படாதவர்கள் யாரும் உள்ளே புக வேண்டாம் எனவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

