காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம் — மாவட்ட ஆட்சியர் தலைமையில் முக்கிய ஆலோசனைகள்
நவம்பர் 1ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம், பொதுமக்களின் தேவைகள் மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்து விவாதித்து தீர்மானிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.அ., தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பல முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
அவற்றில் சில முக்கிய அம்சங்கள்:
ஊராட்சி நிதி நிலுவை மற்றும் செலவுகள் பற்றிய அறிக்கை.
மழைக்கால முன்னேற்பாடுகள், வடிகால் பராமரிப்பு, மற்றும் பொதுச் சுத்தம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் பிற அரசுத் திட்டங்கள் குறித்து ஆலோசனை.
மேலும், ஒவ்வொரு ஊராட்சியும் வாக்காளர் வரவு-செலவு கணக்குகளை கூட்டத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது;
“கிராம சபைக் கூட்டம் என்பது மக்கள் பங்களிப்பு அரசின் அடித்தளம். பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும்,” எனக் கூறினார்.
இக்கூட்டம் மக்களின் தேவைகளை நேரடியாக கேட்டு தீர்வுகாணும் நோக்கில் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லோகநாதன்.
