Tue. Mar 17th, 2026

குடியாத்தம் | வேலூர் மாவட்டம் | மார்ச் 15

இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், சென்னை டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் அறக்கட்டளை, வேலூர் உதவும் உள்ளங்கள் அமைப்பு மற்றும் குடியாத்தம் ஸ்ரீ ஆதிசங்கரர் வித்யா மந்திர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமை நடத்தினர்.

இந்த முகாம் குடியாத்தம் அப்பு சுப்பையா வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் வித்யா மந்திர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் உதவும் உள்ளங்கள் நிறுவனர் சந்திரசேகர் ஐயர், அமைப்பின் உறுப்பினர்கள் ஈ. வாசுதேவன், எஸ். பிரேம்குமார், வி.எம்.வி. ராஜேந்திர குமார் (அறங்காவலர் மற்றும் தலைவர்), பி.எஸ். இளங்கோ (செயலாளர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.

பல்வேறு கண் நோய்களுக்கு பரிசோதனை

முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு ஒற்றைத்தலைவலி, தூரப்பார்வை குறைபாடு, தொடர்ச்சியான தலைவலி, கிட்டப்பார்வை, கண்ணில் புரை (கேட்டராக்ட்), கண்ணில் சதை வளர்ச்சி உள்ளிட்ட கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

கூடுதல் மருத்துவ பரிசோதனைகள்

மேலும், துளசி பார்மசி மூலம் முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் தொடர்பான பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

100க்கும் மேற்பட்டோர் பயன்

இந்த இலவச மருத்துவ முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியின் முடிவில் முகாம் ஒருங்கிணைப்பாளர் செ. சதீஷ்குமார் நன்றி தெரிவித்தார்.

செய்தி:
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS