Thu. Feb 12th, 2026

அரூர் | மக்கள் செய்தி

தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதிகளில் நடைபெற்று வரும் கனிம வள அகழ்வு மற்றும் கல்குவாரி செயல்பாடுகள், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கல்குவாரிகள், ஜல்லி கிரசர்கள் போன்றவை அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இதில் சில குவாரிகள் அரசு அனுமதி பெற்று செயல்படுவதாகவும், சில இடங்களில் அனுமதி இன்றி அகழ்வு நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், அனுமதி அளிக்கப்பட்ட அளவை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகமாக பாறைகள் வெட்டப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த அளவுக்கு மீறிய அகழ்வால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், சுற்றுவட்டாரப் பயிர்கள் நாசமடைந்து வருகின்றன. அதேபோல், குடிநீர் ஆதாரங்களும், பாசன நீர்வளங்களும் குறைந்து, விவசாயம் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. குவாரிகளில் வெடி வைப்பதால் பாறைகள் குடியிருப்புகள், குடிசைகள் மற்றும் கால்நடைகளின் மீது விழுந்து சேதம் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக பல விவசாயிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி, வாழ்வாதார இழப்பை எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், கனிம வள அகழ்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் நிலவி வருகிறது.

எனவே, கனிம வள அகழ்வால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், விவசாய இழப்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என சமூகத்தின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மற்றும் ஜல்லி கிரசர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு, அரூர் பகுதியில் கனிம வள அகழ்வை ஒழுங்குபடுத்தி, விவசாயம் மற்றும் மக்கள் நலன் பாதுகாக்கப்படும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூகத்தின் நியாயமான எதிர்பார்ப்பாக உள்ளது.

👉 வளர்ச்சி என்பது விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் உயிர் பாதுகாப்புடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என்பதே இந்த சமூகக் கோரிக்கையின் நோக்கமாகும்.

ராஜீவ்காந்தி

மண்டல செய்தியாளர்.

By TN NEWS