கள் தடை நீக்கம், பொய் வழக்குகள் வாபஸ் – 10 கோரிக்கைகள் நிறைவேற்றம்.
செஞ்சி :
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த தாயனூர் பகுதியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில்
பனையேறிகள் பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்பு – கள் விடுதலை மாநில மாநாடு, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில்,
தமிழ்நாட்டில் மட்டும் அமலில் உள்ள கள் இறக்கி பருகவும் விற்கவும் விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும்,
கள்ளை மதுவிலக்கு சட்டத்திலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும்,
கள்ளை தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என்பதுடன்,
தமிழ்நாடு முழுவதும் பனையேறிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகள் மற்றும் கள் வழக்குகளை நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட
10 கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்கும் குப்பை – உர இறக்குமதி குறித்து சுட்டிக்காட்டல்.
மாநாட்டில் உரையாற்றிய ஈசன் முருகசாமி,
இந்தியாவின் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் சேகரிக்கப்படும் சுமார் 6 கோடி மெட்ரிக் டன் மக்கும் குப்பைகளை தரம் பிரித்து பயன்படுத்தினாலே,
வெளிநாடுகளில் இருந்து 6 கோடி மெட்ரிக் டன் உரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே இல்லை எனத் தெரிவித்தார்.
ஆனால், தரம் பிரிக்கப்படாத பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் பயன்படுத்தப்படுவதால்,விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன உணவுப் பொருட்களின் சத்துத்தன்மை குறைகிறது அதன் விளைவாக மக்கள் ஆரோக்கியமாக வாழ முடியாத நிலை உருவாகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.
பனையேறிகள் மீது மனித உரிமை மீறல் – அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உலகளாவிய உணவு தேடும் உரிமையின் ஒரு பகுதியாக,
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி,
பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி பருகவும் விற்கவும் உரிமை உள்ளது என்றும்,
அந்த உரிமையை தடை செய்வதும்,
பனையேறிகள் மீது காவல்துறையினர் பொய் வழக்குகள் பதிவு செய்வதும், கைது செய்வதும் மனித உரிமை மீறல் என்றும் கூறினார்.
வரும் தேர்தலில் விவசாயிகள் ஒற்றுமையாக வாக்களிப்போம்.
மேலும் அவர் கூறுகையில்,வரும் தேர்தலில், சாதி, மதம் பார்க்காமல், கள் தடை நீக்கத்திற்காக விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சக்திகளுக்கு ஒற்றுமையாக வாக்களிப்போம் என்ற உறுதியை விவசாயிகள் எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
அதேபோல், ஆட்சி செய்ய விரும்பும் அரசியல் கட்சிகள் மேடைகளில் இந்திய தேசியம், தமிழ் தேசியம், திராவிட தேசியம் குறித்து பேசினாலும், நடைமுறையில் டாஸ்மாக் மதுபான வருமானத்தை நம்பியே ஆட்சி செய்கின்றனர் என்றும், டாஸ்மாக் கொள்கையில் நிலைத்திருக்கும் அரசியல் நிச்சயமாக ஒழிக்கப்படும் என கடுமையாக விமர்சித்தார்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டில் அரசு தோல்வி:
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த வேண்டிய அரசும் காவல்துறையும் தங்களது கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்றும், அதே நேரத்தில் கள் இறக்கும் பனையேறிகள் மீது மட்டும் வழக்கு, கைது என நடவடிக்கை எடுப்பதால் தான்,போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
பனை பாதுகாப்பு சட்டம் – நடைமுறை இல்லை:
தமிழ்நாட்டில் பனை பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், பனை மேம்பாட்டு வாரியம் செயல்படாமல் உள்ளது என்றும்,
பனை சார்ந்த பொருட்களை வெளிநாடுகளில் காட்சிப்படுத்தி
ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பதிலாக,
தமிழ்நாட்டு நிலங்களை வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்க முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டினார். மேலும், தமிழர்களின் மரபு உற்பத்தி பொருட்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
பெருந்திரளான பங்கேற்பு, இந்த மாநாட்டில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம், பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் இயக்கங்களின் நிர்வாகிகள் பனையேறிகள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.
செய்தி :
விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர் – தமிழ். மதியழகன்
மாவட்ட ஒளிப்பதிவாளர் : K. மாரி
