Sun. Jan 11th, 2026

தென்காசி மாவட்டம், குற்றாலம்:

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற குற்றால அருவிகளில் நீராடுவதற்காக, ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், குற்றால அருவிகளில் சோப்பு மற்றும் ஷாம்பு பயன்படுத்தி குளிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவான உத்தரவு வழங்கியிருந்தது. இயற்கை சூழலை பாதுகாக்கும் நோக்கில் வழங்கப்பட்ட இந்த நீதிமன்ற உத்தரவு, தற்போது கண்மூடித்தனமாக மீறப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது குற்றாலத்தின் பிரதான அருவிகள் உள்ளிட்ட பல இடங்களில், சுற்றுலா பயணிகள் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட ரசாயனப் பொருட்களை பயன்படுத்தி நீராடும் சூழல் நிலவி வருகிறது. இதனால் அருவிகளின் நீர்த் தூய்மை பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் சமநிலைக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் கோவில் நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ள நிலையில், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் பலவீனமாக உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

“நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்களை தடுக்க மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சமூக ஆர்வலர்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் – தலைமை செய்தியாளர்

By TN NEWS