Sat. Jan 10th, 2026

வீடற்றவர்களுக்கு பாதுகாப்பான இரவு – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி.

சென்னை மெரினா கடற்கரையில், வீடற்ற ஏழை மக்களுக்காக இரவு நேர காப்பகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறம், ரூ. 86.20 லட்சம் செலவில் 2400 சதுர அடியில் நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் வசதியுடன் இந்த காப்பகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த இரவு நேர காப்பகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அடிப்படை வசதிகளுடன் பாதுகாப்பான தங்குமிடம்

இந்த காப்பகத்தில்,

டைல்ஸ் பதிக்கப்பட்ட தரை

கழிப்பறை வசதி

மின்விசிறிகள்

ஒரே நேரத்தில் சுமார் 80 பேர் தங்கும் வசதி

மேலும், தங்குபவர்களுக்கு பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட உள்ளன.

மெரினா – அழகும் மனிதநேயமும்:

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான மெரினா கடற்கரை, தமிழ்நாட்டில் இருந்து சென்னை வரும் மக்கள் தவறாமல் செல்லும் இடமாக உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இந்த கடற்கரை, சமீப காலங்களில் நீலக்கொடி சான்றிதழுடன் வளர்ந்த நாடுகளின் கடற்கரைகளுக்கு இணையாக அழகுபடுத்தப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் வீடற்றோரின் யதார்த்தம்:

மெரினாவில் இரவு 10 மணிக்கு பிறகு பொதுமக்களுக்கு அனுமதி இல்லாவிட்டாலும், மணற்பரப்பில் வீடற்ற மக்கள் குடும்பம் குடும்பமாக உறங்கும் நிலை தொடர்ந்து வருகிறது. இவர்களில்,

ஆதரவில்லாத முதியவர்கள்

ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள்

தானம் கேட்கும் சாலையோர மக்கள்
அதிகமாக உள்ளனர்.

பொது வெளியில் உறங்கும் இவர்களுக்கு பாதுகாப்பும் அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை மனிதநேய ரீதியாக பெரும் சவாலாக இருந்து வந்தது.

மாநகராட்சியின் மனிதநேய நடவடிக்கை:

இந்த நிலையை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி வீடற்றோரின் பாதுகாப்புக்காக இந்த இரவு நேர காப்பகத்தை உருவாக்கியுள்ளது. காப்பக பராமரிப்பு பொறுப்பு தனியார் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு தங்குபவர்களுக்கு அம்மா உணவகத்தின் மூலம் உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முயற்சி, மெரினா கடற்கரையின் கட்டமைப்பு வளர்ச்சியை மட்டுமல்லாமல், சமூக அக்கறையும் மனிதநேயமும் கொண்ட நகர நிர்வாகத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

✍️ ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்

By TN NEWS