தென்காசி, டிச.17 :
தென்காசி மாவட்டம், மேல நீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேர்ந்தமங்கலம் கஸ்பா ஊராட்சி, முப்புடாதி அம்மன் கோவில் தெரு (1வது வார்டு) பகுதியில் நீண்ட காலமாக சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாத காரணத்தால், மழைக்காலங்களில் சாக்கடை நீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மின்விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாமலும், குடிநீர் (தாமிரபரணி நீர்) விநியோகம் சீராக இல்லாமலும் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்த போதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறும் பொதுமக்கள், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
ஜே. அமல்ராஜ்
மாவட்ட தலைமை செய்தியாளர், தென்காசி
