சென்னை, 27 நவம்பர் 2025:
எருக்கஞ்சேரி, அண்ணாநகர் பகுதியில் கடந்த நாற்பது ஆண்டுகளாக வழிபாட்டு மையமாக இருந்து வரும் நாகத்தம்மன் கோயிலின் சுவர்களின் அருகில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணியின் காரணமாக, சுவர்கள் சேதமடைந்ததாக உள்ளூர் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
கால்வாய் அமைக்கும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது, கோயிலின் வெளிப்புற சுவரும் உள் சுவரும் பல இடங்களில் பிளந்து இடிந்து சேதமானதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரியை சந்தித்தபோது, “தேவையெனில் கோயிலின் நடுவிலேயே மழைநீர் கால்வாயை போடுவேன்” என திமிரான பதில் அளித்ததாகவும், இது பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும் மக்கள் கண்டனம் தெரிவித்தனர். அதிகாரியின் இந்தப் பேச்சு அரசு அதிகாரியின் ஒழுக்க விதிகளுக்கும், குடிமக்களிடம் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை விதிமுறைகளுக்கும் முரணானது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நாகத்தம்மன் ஆலயம் எருக்கஞ்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து வருவதுடன், ஆண்டு தோறும் சிறப்பு பூஜைகள், திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் இடமாகவும் அறியப்படுகிறது. அத்தகைய இடத்தில் நடக்கும் பொது உட்கட்டமைப்பு பணிகளில், கோயிலின் கட்டிடப் பாதுகாப்பு, பக்தர்களின் பாதுகாப்பு ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகள்:
கோயிலின் சேதமடைந்த சுவர்களை மாநகராட்சி உடனடியாக சரிசெய்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பணிகளை திட்டமிட்டு, கோயில் கட்டடத்துக்கு மேலும் எந்தவித பாதிப்பும் இல்லாதபடி தொழில்நுட்ப நிபுணர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ள வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரியின் நடத்தை குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி, தேவையான ஒழுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
M. யாசர் அலி
சென்னை மாவட்ட செய்தியாளர்.
